பக்கம் எண் :

6 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

செய்திகளையும் உரைநயங்களையும் இவ்வியலில் இடையிடையே காணலாம். சுருங்க
நோக்கின் இவ்வியல் நன்னூலின் சுருக்கமும் தொல்காப்பியத்தின் தெளிவும்,
தொல்காப்பிய உரையாசிரியர்கள் வரைந்த நுண்ணிய உரைநயங்களும் ஒருசேர
அமைந்து சிறப்புற்றிருக்கின்றமை தேற்றம்.
 

இடையியல்
 

இடையியலுக்கு இவ்வாசிரியர் இடைச்சொல்லியல் என்றே தெளிவுபெறத் தலைப்பு
இட்டுள்ளார். நன்னூலை ஒட்டி இடைச்சொல்லிலக்கணம் குறிப்பு என்ற பகுப்பு
நீங்கலாகத் தொடக்கத்தில் வரையப்பட்டுள்ளது. ஆனால், உரை நயங்கள் பலவும்
தொல்காப்பிய உரைகளைப் பின்பற்றியே வரையப்பட்டுள்ளன. பின், ஏகாரம் ஓகாரம்
பற்றிய நூற்பாக்கள் நன்னூலை ஒட்டியனவேனும், தொல்காப்பிய உரை
களைப்பின்பற்றியே விளக்கம் பெற்றுள்ளன. தெளிவின் ஏயும் சிறப்பின் ஓவும்
அளபெடுக்கும் என்ற தொல்காப்பியவிதி இயைபு பற்றி ஈண்டு இடம் பெற்றுள்ளது.

அடுத்து, என-என்று-உம்-என்ற இடைச்சொற்கள் நன்னூலை ஒட்டி
விளக்கப்பட்டுள்ளன. உரைநயங்கள் தொல்காப்பிய உரைகளைப் பின்பற்றியனவே.

முற்றும்மை எச்சமாதலும், எஞ்சுபொருட்கிளவி செஞ்சொல் ஆயின் முற்படக்
கிளக்கப்படுதலும் என்றா-எனா-ஒடு- என்பன எண்ணுப்பொருளில் வருதலும்,
பெயர்ச்செவ்வெண்-ஏ-என்றா-எனா என்பன தொகைபெறுதலும்,
உம்மை-என்று-என-ஒடு-என்பன அவ்வரையறை யிலவாதலும், என்றும் எனவும் ஒடுவும்
இடையிட்டு வந்தும் எண்ணுப்பொருளைத் தவறாது தருதலும், எண்ணிடைச்சொற்கள்
வினைக்கண்ணும் வருதலும் முறையே கூறப்பட்டுள்ளன.