அடுத்து, மன் என்ற இடைச்சொல் நான்கு பொருள்களிலும், தில் என்ற இடைச்சொல் மூன்று பொருள்களிலும், கொன் என்ற இடைச்சொல் நான்கு பொருள்களிலும், மற்று என்ற இடைச்சொல் வினைமாற்று அசைநிலை என்ற இரண்டு பொருள்களிலும் வருமாறு கூறப்பட்டுள்ளது. எற்று, மற்றை, கொல், மன்ற, தஞ்சம், ஒடு, தெய்ய அந்தில், ஆங்க, அம்ம, மா என்ற இடைச்சொற்கள் இன்ன இன்ன பொருள்களில் வரும் என்பது பின்னர்க் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து, முன்னிலை அசைச்சொற்களும், இடப்பொதுவாகிய அசைச்சொற்களும், இடைச்சொற்குப் பொருள்பற்றி அமையும் புறனடையும், இறுதியில் சொல்பற்றியமையும் புறனடையும் இடம்பெற்றுள்ளன. விரிவான எடுத்துக்காட்டுக்களும் விளக்கங்களும் தொல்காப்பிய உரைகளை ஒட்டி வரையப்பட்டுள்ளன. |
தெளிவு குறித்து இவ்வியல் உரிச்சொல்லியல் என்றே பெயரிடப்பட்டுள்ளது. உரிச்சொல்லின் இலக்கணம் தொல்காப்பியத்தை ஒட்டிக் குறிப்பிடப்பட்டுள்ளது. சேனாவரையர் உரையே பெரும்பாலும் இடம் பெற்றுள்ளது. குறிப்பு உணர்த்துவனவற்றுள், தாம் பலவாய் நின்று ஒரு பொருள் உணர்த்தும் உரிச்சொற்கள் முதலில் தொகுத்து உரைக்கப்பட்டுள்ளன. அடுத்து, குறிப்பு உணர்த்துவனவற்றுள், தாம் ஒன்றாய் நின்று பலபொருள் உணர்த்தும் உரிச்சொற்கள் இடம் பெற்றுள்ளன. பின், பண்பு உணர்த்துவனவற்றுள், தாம் பலவாய் நின்று ஒருபொருள் உணர்த்தும் உரிச்சொற்களும், தாம் ஒன்றாய் நின்று பலபொருள் உணர்த்தும் உரிச்சொற்களும் தனித்தனி நூற்பாக்கொண்டு விளக்கப் பெற்றுள்ளன. |