அடுத்து. இசை உணர்த்துவனவற்றுள், தாம் பலவாய் நின்று ஒருபொருளை உணர்த்தும் உரிச்சொற்களும் தாம் ஒன்றாய் நின்று பலபொருள் உணர்த்தும் உரிச்சொற்களும் முறையே கூறப்பட்டுள்ளன. பின், உரிச்சொற்களின் பொருள் பற்றிய புறனடை தரப்பெற்றுள்ளது. உரிச்சொற்கள் பகுதி விகுதிகளாகப் பிரிக்கப்படா என்பதும், உரிச்சொற்களுக்கு ஆவதொரு புறனடையும் புலப்படுகின்றன. பொருட்குப் பொருள்தெரியின் வரம்பிலதாகும் என்பதும், பொருளை நன்கு உணர்த்தின் அது தவறாது புலனாகும் என்பதும், அதனை உணர்தற்கு ஓரளவு அறிவுத்திற னும் வேண்டும் என்பதும், மொழிப் பொருட் காரணம் ஆராய்ச்சியால் முழுதும் புலப்படாது என்பதும் முறையே கூறப்பட்டுள்ளன. இவ்வுரிச்சொல்லியலில் இவ்வாசிரியர் தொல்காப்பிய நூற்பாக்களைக் குறிப்பு - பண்பு - இசை - என நிரலே அமைத்தும் எஞ்சியவற்றைப் புறனடை நூற்பா உரையில் சொல்லியும், உரிச்சொற்றொகுதியைத் தொல்காப்பியனார் உரைத்தவற்றை முழுதும் உட்கொண்டு எஞ்சாது சொல்லிச் சொற்பொருள் ஆராய்ச்சி பற்றிய நூற்பாக்களையும் தொல் காப்பியனார் கூறியாங்கு நிரலே உரைத்துள்ள திறம் பாராட்டத்தக்கது. |