பக்கம் எண் :

264 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

விளக்கம்
 

வினை என்றது முதல்நிலையை, இஃது ஆகுபெயராய்த் தன்னால் பிறக்கின்ற சொல்லை உணர்த்திற்று.

உண்-தின்-கரு செய்- என்பன வினை.

உண்டல்-தின்றல்-கருமை- செம்மை-என்பன அம் முதல்நிலையால் பிறந்த வினைப்பெயர்.

உண்டான்-தின்றான்-கரியன்- செய்யன்-என்பன அம்முதல்நிலையால் பிறந்த வினைச்சொல்.

இங்ஙனம் வினையால் பிறத்தலின் வினையியல் என்றார். (தொல். சொல். 201 நச்) நிறுத்தமுறை 171 ஆம் நூற்பாவில் நிறுத்த முறை.

புடைபெயர்ச்சியாவது வினை நிகழ்ச்சியாம் பொருட் புடைபெயர்ச்சியாவது பொருட் பண்பின் புடைபெயர்ச்சி எனவே கொள்க. புடை பெயர்ச்சி யெனினும் வினைநிகழச்சி எனினும் ஒக்கும்- (சூ-வி.35ப.)

வேற்றுமை என்பது உருபையும், வேற்றுமை உருபையும் ஏற்றசொல்லையும், வேற்றுமை உருபு ஏற்ற சொல் கொண்டு முடியும் சொல்லையும், உணர்த்தும் சொல். (இ.கொ.20) ஈண்டு அது வேற்றுமை உருபை உணர்த்துகின்றது.

கரியன் என்ற குறிப்பு வினையைப் பண்டு கரியனாய் இருந்தனன் என்றாற்போல விளக்கியவாறு.

காலமொடு தோன்றுவன- வினைச் சொல்லும் வினையால் அணையும் பெயரும். வேற்றுமை கொள்ளாதன-வினைச் சொல்லும் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் ஆவன.