பக்கம் எண் :

338 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

நூற்றகலிங்கம், பூத்தகண்ணி என்பன ஒற்றுமை நயந்தான் பொருட் பெயராகிய
செயப்படுபொருள் கொண்டன. நூற்கப்படுவது நூல்; பூப்பது பூ; நூல்- நூலான் இயன்ற
கலிங்கத்தையும், பூ-பூவான் இயன்ற கண்ணியையும் குறிப்பது ஒற்றுமை நயமாம்.

நூலாக்கலிங்கம்- நூற்ற நூலான் இயலாதகலிங்கமாகிய பட்டாடை. இதுவும்
செயப்படுபொருள் கொண்டதாகக் கொள்ளப்படும்.

உம்மை- அறுபொருட் பெயரொடும் என்பதில் உள்ள உம்மை.

ஆ கொடுத்த பார்ப்பான்- ஆ கொடுத்தற்காக வரவழைக்கப்பட்ட பார்ப்பான்-
இன்னதற்கு; ‘கபிலை கண்ணிய வேள்வி நிலையும்’ (தொல். பொருள்.90) என்ற
தொடருக்கு ‘இது வரையா ஈகையன்றி, இன்னலுற்றால் கொடுக்க என்று பெரியோர் கூறும்
நாட்காலையிலே கொடுப்பதாம் ஆதலின் வேறு கூறப்பட்டது’ என்ற நச்சினார்க்கினியர்
உரையை உட்கொண்டு, இவ்வாறு உரை கொள்க.

ஆடை ஒலித்த கூலி- ஆடை ஒலித்ததன் பயனாகப் பெற்ற கூலி- இதுபயன்.

பழம் உதிர்ந்தகோடு-பழம் உதிர்தலைப்பெற்ற கோடு எனத் தீர்தல் பொருட்கண்
வந்தது.

கரிய முதலியவற்றிற்கு இலக்கிய மேற்கோள்கள் தரப்பெற்றுள்ளன- செய்திகள்
பெரும்பான்மையும் தொல்காப்பியச் சொற்படல 236ஆம் நூற்பாவில் நச்சினார்க்கினியர்
உரைத்தனவே. சிறுபான்மை சேனாவரையர் கருத்தாதல் மேல் கூறப்பட்டது.