பக்கம் எண் :

உரிச்சொல்இயல்-நூற்பா-1443

நான்காவது-உரிச்சொல் இயல்
உரிச்சொற்குப் பொதுவிலக்கணம்
 

280. குறிப்பும் பண்பும் இசையும் தோன்றிப்
பெயரும் வினையும் என்றவை இரண்டற்கும்
அடியும் ஆகி அவற்றுஏற் புழிநின்று
ஒருபொருட்கு உரிமையும் பலபொருட்கு உரிமையும்
உடைய ஆகி உணரா தவற்றை
உணர்ந்தவை சார்த்தி உரைப்பன உரிச்சொல்

 


என்பது சூத்திரம். நிறுத்த முறையானே உரிச்சொற்களது இயல்பு உணர்த்திற்று
ஆகலான், இவ்வோத்து உரிச்சொல் இயல் என்னும் பெயர்த்து. இதனுள்
இத்தலைச்சூத்திரம் உரிச்சொற்கு எல்லாம் பொது இலக்கணம் உணர்த்துகின்றது.

இ-ள்: குறிப்பும் பண்பும் இசையும் ஆகிய மூன்று பொருண்மையும் உணர்த்திப்
பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் போலத் தம்மைக்காட்டி, அவ்விரு கூற்று
மொழிக்கும் முதல்நிலையுமாய், அவற்றின்கண் முன்னாகப்பின்னாகத் தாம் நிற்றற்கு
உரிய நிலைக்களங்களில் நின்று, பல சொல் ஒரு பொருட்கு உரிய ஆதலையும்
ஒருசொல் ஒரு பொருட்கு உரித்தாதலே அன்றிப் பலபொருட்கு உரித்தாதலையும்
உடையவாகி, பெயர் வினைபோலஈறுபற்றிப்பொருள் உணர்த்தலாகாமையின் பயிற்சி
உண்மையால் கேட்போனால் பொருள் உணரப்படாத சொற்களைப் பயிற்சி
உண்மையால் பொருள் உணரப்பட்ட சொற்களொடு சார்த்தி உணரப்படுவன-
முற்கூறிப்போந்த உரிச்சொற்களாம் என்றவாறு.

குறிப்பு பரப்பு உடைமையின் முற்கூறினார். குறிப்பு-மனத்தால் குறித்து
உணரப்படுவது. பண்பு- பொறியான் உணரப்படும் குணம். குறிப்பும் இசையும் பண்பின்
பகுதியாய் அதன் கண் அடங்குமேனும், விளக்குதற் பொருட்டு வேறுகூறினார்.