பக்கம் எண் :

450 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘மணம்கமழ் வியன்மார்பு அணங்கிய செல்லல்’ அகம். 22
எனவும்,
 
  ‘வெயில்புறம் தரூஉம் இன்னல் இயக்கத்து’ மலைபடு. 374
எனவும், செல்லலும் இன்னலும் ஆகிய இரண்டு உரிச்சொற்களும் இன்னாமை என்னும் உரிச்சொல் உணர்த்தும் குறிப்புப் பொருள் உணர்த்தலும்,
 
  ‘அலமரல் ஆயம்’ குங்குறு.64
எனவும்,
 
  ‘தெருமரல் உள்ளமொடு அன்னை துஞ்சாள்’
 
எனவும் அலமரலும் தெருமரலும் ஆகிய இரண்டு உரிச்சொற்களும் மனத்தடுமாற்றம் ஆகிய சுழற்சி என்னும் உரிச்சொல் உணர்த்தும்குறிப்பு உணர்த்தலும்,
 
  ‘வரைபுரை மழகளிறு’ புறம்.38
எனவும்,
 
  ‘குழக்கன்று’ நாலடி-101
எனவும்,

மழவும் குழவும் ஆகிய இரண்டு உரிச்சொற்களும் இளமை என்னும் உரிச்சொல்
உணர்த்தும் குறிப்பு உணர்த்தற்குப் பொருந்துதலும்,
 

  ‘இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇத்
துனிகூர் எவ்வமொடு’
சிறுபாண்.38, 39
எனவும்,
 
  ‘சினனே காமம் கழிகண்ணோட்டம்’ பதிற்.22
எனவும் கூர்ப்பும் கழிவும் ஆகிய இரண்டும் முன் சிறவாது உள்ளது ஒன்று சிறத்தல் ஆகிய குறிப்பு உணர்த்தலும்,