பக்கம் எண் :

உரிச்சொல்இயல்-நூற்பா-2453

  ‘தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து’ நெடுநல்-90
எனவும்,
 
  ‘புண்உமிழ் குருதி முகம்பாய்ந்து இழிதர’ குறிஞ்சி.72
எனவும் ஞெமிர்தலும் பாய்தலும் ஆகிய இரண்டும் பரத்தலாகிய குறிப்பினை
உணர்த்தலும்,
 
  ‘மன்ற மராஅத்த பேம்முதிர் கடவுள்’ குறுந்.87
எனவும்,
 
  ‘நாம நல்லரா கதிர்பட உமிழ்ந்த’ அகம்-72
எனவும்,
 
  ‘உருமில் சுற்றமொடு’ பெரும்பாண். 447
எனவும் பேமும் நாமும் உருமும் என்று சொல்ல வருகின்ற கிளவியாகிய
அம்முறைமையினையுடைய மூன்று உரிச்சொற்களும் அச்சம் ஆகிய குறிப்பு
உணர்த்தலும்,
 
  ‘நிற்கறுப்பதோர் அருங்கடி முனையள்’
 
எனவும்,
 
  ‘நீ சிவந்து இறுத்த நீர்அழி பாக்கம்’ பதிற்.13
எனவும், கறுப்பும் சிவப்பும் ஆகிய இரண்டும் வெகுளியாகிய குறிப்பு உணர்த்தலும்,
 
  ‘கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே’
புறம்.335
எனவும்,
 
  ‘செறிவளை விறலியர் கைதொழூஉப் பழிச்சி
வறிதுநெறி ஒரீஇ’

 
எனவும், பரவும்பழிச்சும் ஆகிய இரண்டும் வழுத்துதல் ஆகிய உரிச்சொல்லின் குறிப்பு உணர்த்தலும் வரலாற்று முறைமை என்று கூறுவர் உரிச் சொற்கள் பொருள் உணர்த்தும் தன்மையை அறிந்தோர் என்றவாறு.