பக்கம் எண் :

485

ஐந்தாவது பொதுவியல்
திணை முதலிய ஏழும் வழுவலாகாமை
 

295. திணையே பால்இடம் பொழுது வினாஇறை
மரபுஆம் ஏழும் வழாஅல் ஓம்பல்

 

என்பது சூத்திரம். வழுவற்க எனவும் வழீஇ அமைக எனவும் காத்து வழுக்களைந்து
சொற்களை அமைத்துக் கோடலும், முற்கூறிய நால்வகை ஓத்தினுள்ளும் கூறுதற்கு இடம்
இன்றி எஞ்சி நின்றன ஆகிய சொல் இலக்கணங்கள் எல்லாவற்றையும் தொகுத்து
ஒருங்கு உணர்த்தலும் நுதலியமையின் இவ்வோத்துப் பொதுவியல் என்னும் பெயர்த்து
ஆயிற்று. இதனானே மேல் ஓத்தினொடு இதற்கு இயைபு உடைமையும் விளங்கும்.
இதனுள் இத் தலைச்சூத்திரம் வழுவற்க எனக்காத்தலும் வழீஇ அமைக என
அமைத்தலும் என்னும் இரண்டனுள் வழுவற்க எனக் காக்கின்றது.

இ-ள்: திணை என்பது முதல் மரபு என்பது ஈறாகக் கிடந்த ஏழனையும்
வழுவாமல் போற்றுக என்றவாறு.

எ-டு: அவன் உண்டான்- அவள் உண்டாள்- அவர் உண்டார்- அது உண்டது-
அவை உண்டன- யான் உண்டேன்- யாம்உண்டேம்- நீஉண்டாய்- நீயிர்உண்டீர்-
எனவும், உண்டான்அவன்- உண்டாள்அவள்- உண்டார்அவர்- உண்டதுஅது-
உண்டனஅவை- உண்டேன்யான்- உண்டேம்யாம்- உண்டாய்நீ- உண்டீர்நீயிர்- எனவும்
திணையும் பாலும் இடனும்,

நெருநல் உண்டேன்- இன்று உண்ணாநின்றேன்- நாளை உண்பேன் எனவும்,
உண்டேன் நெருநல்- உண்ணாநின்றேன் இன்று- உண்பேன் நாளை- எனவும் காலமும்,