பிற்சேர்க்கை அன்மொழித்தொகை ஆராய்ச்சி இருவர் மாறுகோள் ஒருதலை துணிவு அரசஞ் சண்முகனார் |
| ‘அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு’ | குறள்:1081 |
இத் தெய்வப்புலமைத் திருவள்ளுவர் அருளிய பாட்டின் கண் கனங்குழை என்பது ஆகுபெயர் எனப் பரிமேலழகரும் அன்மொழித்தொகை எனச் சிவஞானமுனிவரும் உரைத்தார். எத்தகைய பேரறிவாளரேயாயினும் தீச்சுடும் என ஒருவரும் தீக்குளிரும் என ஒருவரும் உரைப்பாராயின் உரைப்பார் பெருமை நோக்கி அவ்விரண்டும் கோடல் அமையாது; பொருள் இயல்பு நோக்கி உண்மை கோடலே அமையும். தெய்வப்புலமைத் திருவள்ளுவரும், |
| ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ | குறள்-423 |
என அருளிச்செய்தார். ஆதலின் கனங்குழை என்னும் சொல் ஒன்றையே ஆகுபெயர் எனவும் அன்மொழித்தொகை எனவும் கூறிய இவ்விருவர் மாறுகோளினுள் முன்னோர் நூலின் முடிபுடன் ஒத்தது யாது- ஒவ்வாதது யாது- என ஆராய்ந்து உண்மை கோடலே மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு மரபு ஆகும் ஆதலின், கொள்ளற்பாலது அன்று ஆகிய உரை இஃது என்றும் கொள்ளற்பாலது ஆகும் மெய்யுரை இஃது என்னும் யாவரும் ஒப்புமாறு தடைவிடை இடைப்பெய்து எழுதப்புக்கேன். யான் எழுதின |