அற்றேல், உருவம் அணங்குகொல், நோக்கம் மாதர் கொல் என அஃறிணைச்சொல் உயர்திணையோடு முடிந்தவாறு என்னையோ எனின், இவ்வுருக்குற்றிகொல் மகன்கொல் என்பதன்கண் உருவம் மகன் என்பதனொடு முடிதலான் அமையும் என்பது. அற்றாயின் அன்மொழித்தொகையாகுபெயர் எனக் கூறல்வேண்டும் எனின், கனங்குழை என்பது அன்மொழித்தொகையாய்ப் பெண்ணை உணர்த்தல் யாவரும் அறியக்கிடத்தலானும், தொடலைக் குறுந்தொடி என்னும் இடம் ஒழிய ஏனைப் பத்திடத்தும் இதுபோலவே விளங்கக் கிடத்தலான் அன்மொழித்தொகை என எழுதாது சென்றார்க்கு ஈண்டு மாத்திரம் எழுதின் தாம் கொண்ட நியமம் தவறுதலானும், இப்பத்திடத்தும் ஆகுபெயர் என எண்ணி எழுதாது விட்டனரோ எனின் யாண்டும் ஆகுபெயரை மாத்திரம் விடாது எழுதி வருகின்றார் ஆதலின் அப்பத்திடத்தும் ஆகுபெயர் என மயக்கத்தால் கருதின் எழுதியே இருப்பார், அங்ஙனம் எழுதாமையான் அவ்வாறு கூறல் அமையாமையானும், தொலைக்குறுந்தொடி என்னுமிடத்து அன்மொழித்தொகையை எழுதினமைக்குக் காரணம் முன்னரே கூறினாம் ஆதலானும், கனங்குழை ஆகுபெயராய் உருவம் முதலியவற்றை உணர்த்தியபின் அன்மொழித்தொகை ஆகாமையானும், கார் அறுத்தது என்புழிக் கருமை என்னும் பண்பே முறையான் ஆகுபெயராகி வரினும் கார்ப்பருவத்து விளைந்த நெல்லை உணர்த்தலான் அது பண்பாகுபெயர் எனப்படாது கால ஆகுபெயர் எனவே சொல்லப்படலானும் அன்மொழித் தொகைஆகுபெயர் எனக் கூறாது ஆகுபெயர் எனக் கூறினார் என்பது. அங்ஙனம் ஆகுபெயராயினும் தன்னொடியைந்ததாகிய யாதானுமொரு பொருளை உணர்த்தாது உருவம் சாயல் முதலிய பலபொருளை உணர்த்தல் என்னையோ எனின், அங்ஙனம் |