உவமையாக நின்றது என்பதை விளக்கற்பொருட்டுக் குறுந்தொடி என்பது அன்மொழித்தொகை ஆகாது பண்புத்தொகையாகி ஒரு சொற்றன்மை எய்திநின்று தொடலை என்றும் சொல்லொடு தொக்குநிற்றலை உணருமாறு உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை என இலக்கணம் கூறினார்.இங்ஙனம் ஆகுபெயரும் அன்மொழித்தொகையும் ஆகிய இவற்றின் வேறுபாடு முழுதும் உணர்ந்து யாண்டும் மயங்காது சென்ற பரிமேலழகர் கனங்குழை என்ற இடத்துமாத்திரம் அன்மொழித்தொகை என உணராது ஆகுபெயர் என மயங்கிக் கூறுவரோ? அங்ஙனம் கூறார் என்பதே தேற்றம். பின் எக்கருத்தான் கனங்குழை என்பது ஆகுபெயர் எனக் கருதினார் எனின், கூறுதும்: அன்மொழித்தொகை எனக்கொள்ளின் முற்கூறியாங்கு வழுப்பட்டு ஆய்மயிலொடு இயையாமையின், பொற்றாமரைக்கண் பூசனை புரிந்தான் என்புழி அது பொன்னும் தாமரையும் ஆகிய இயற்பெயர்ப் பொருளையும் உணர்த்தாது அன்மொழித்தொகையாகிய அப் பொற்றாமரையை உடைய தடாகத்தையும் உணர்த்தாது ஆகுபெயராகி அத்தடாகத்தின் கரையையே உணர்த்துமாறு போலக் கனங்குழை என்பதும் கனமும் குழையும் ஆகிய இயற்பெயர்ப் பொருளையும் உணர்த்தாது, அன்மொழித்தொகை ஆகிய அக்கனங்குழையை உடைய மகளையும் உணர்த்தாது ஆகுபெயராய் அம்மகளது உருபு- சாயல்- நோக்கம்- முதலியவற்றை உணர்த்தி இப்பெண்ணின் உருவமும் செயலும் அணங்குகொல் பிறிதுகொல், சாயலும் செயலும் ஆய்மயில்கொல் பிறிதுகொல், நோக்கழும் செயலும் மாதர்கொல் பிறிதுகொல் என வழுவின்றி ஐயப் பொதுச்சொல்லாய் நிற்றலைத் தமது நுண்ணுணர்வாற் கண்டு ஆகுபெயர் என உண்மை விளக்கம் கூறினார் என உணர்க. |