என்னும் சூத்திரத்து உம்மைத்தொகைக்குச் சார்பு அறுவகைச் சொற்றிரளும் என்றாற்போல அன்மொழித்தொகைக்கும் எல்லாவற்றையும் விதந்து இத்துணைத்து எனக் கூறலே முறையாகலின் சிலவிதந்து கூறிச் சிலவற்றை முறையன்றிக் கூற்றால் பெறவைத்தார் எனலும், பண்புத்தொகை ஒப்பவே உம்மைத்தொகை ஒழிந்த ஏனைத்தொகைக்கண் நிற்றலும் பெரும்பான்மை ஆகலின் அக்காரணத்தால் அதனை முறையிற் கூறாது முற்கூறினார் எனலும் உம்மைத்தொகை நிலைக்களத்து நிற்றல் பிறதொகைக்கண் நிற்றலினும் சிறுபான்மையாகவும் அதனை விதந்து கூறினார்க்கு அதனிலும் மிக்க வரவினை உடையவாகிய உவமைத்தொகை வினைத்தொகைகளின் நிலைக்களத்து நிற்றலையும் விதந்து கூறலே மரபு ஆதலின் அவற்றைக் குறிப்பான் உணர வைத்தார் எனலும் பொருந்தா. சொல் சுருங்குதல் பொருட்டுக் கூறினார் எனின்,‘ஐந்தொகை மொழிமேல் பிறதொகல் அன்மொழி’ என நன்னூலார் கூறினாற்போலப் பின்னும் சுருங்கச் சொல்லுதற்கு இயலும் ஆகலின் அங்ஙனம் கூறாது சில கூறிச் சில கூறாமை குன்றகூறலாம். மாணாக்கர்க்கு அறிவு விளங்கற்பொருட்டுச் சிலகூறிச் சிலவற்றை உய்த் துணரவைத்தார் எனின், அதற்குக் கருவி யாதானும் ஒன்று இருத்தல் வேண்டும். அங்ஙனம் இன்மையான் அதுவும் பொருந்தாது. முறையின்றிக் கூறலே கருவியெனின், ஈ- ஆ- ஊ- என முறையின்றி மூன்றுஎழுத்து மட்டும் கூறி அவை நெடில் எனின் அது கொண்டு மாணாக்கர் நெடில் ஏழு என்று உணர்ந்து கொள்வர் என்பதனொடு ஒக்கும். அன்றியும் அவ்வாறு ஓர் இலக்கணம் இருப்பின் |