இடமாக நிற்றலானும் ஆசிரியர்க்கு அது கருத்தாயின் பண்புதொக வரூஉம் கிளவிக்கும் உம்மை தொக்க பெயர்க்கும் வேற்றுமைத்தொக்க பெயர்க்கும் ஈற்றின் நின்று இயலும் என நான்காவது விரித்துக் கூறுவரே அன்றி ஏழாவது பொருள்படக் கூறார் ஆகலானும், சொற்கண்ணும் பெயர்க்கண்ணும் இறுதிக்கண் நின்று இயலும் என இரண்டிடத்தும் ஏழாவது விரிப்பின் சொல் பெயர் என்பன பொதுப்பொருளும், முதல் இடைஈறு என்பன ஒரு பங்கில்படும் பொருளுமாக நிற்றலின், சொல்லும் பெயரும் ‘அதற்குப்பொருளை உடைய நான்காவதற்கு உரியவே அன்றி, அவை, முதல் இடைஈறு என்பவற்றிற்கு இடம் ஆகாமையான் இடப்பொருளை உடைய ஏழாவதற்கு உரிய ஆகாமையானும் அவர் உரை பொருந்தாது என்பது. இனிப் பண்பும் உம்மையும் வேற்றுமையும் தொக்க சொற்களின்கண் நின்று நடக்கும் அன்மொழித்தொகை எனவே, அவை தொகாது வெளிப்பட்டு நின்ற சொற்களின் கண் நின்று அன்மொழித்தொகை நடவாது எனவும் கூறினார் ஆயிற்று. அவற்றுள் பண்புத்தொகை விரியும் இடத்து அதன் சொல்லான் அன்றிப் பிறசொல் கொண்டு விரியும். இனிப் பண்புத்தொகை முதலிய மூன்றையும் விதந்து கூறி அவை ஒழிந்த ஈறு எனப் பொருள்படுமாறு ‘ஈற்றும் நின்று’ எனக் கூறலான், தொகைமொழியுள் விதந்துகூறிய அம்மூன்றும் ஒழிந்த உவமையும் வினையும்- தொக்க சொற்றொடர்களின் ஈற்று நின்ற பெயர்க்கண்ணும், அவை தொகாது வெளிப்பட நின்ற தொகாநிலைச் சொற்றொடர்களின் ஈற்று நின்ற பெயர்க்கண்ணும் ஏனைய தொகாநிலைச் சொற்றொடர்களுள் அன்மொழித்தொகைக்கு முதல்நிலை ஆகும் இயல்பின அல்லாத சொற்றொடர்கள் ஒழிந்த பிறசொற்றொடர்களின் ஈற்று நின்ற பெயர்க்கண்ணும் அன்மொழித்தொகை நின்று நடக்கும் எனக் கூறினார் ஆயிற்று, |