இனித் தொகாநிலைச் சொற்றொடர்களுள் அன்மொழி பற்றிநிற்கும் இயல்பு இல்லாதன யாவை எனின்- எழுவாய்த் தொடர்க்கும் விளித்தொடர்க்கும் வினையெச்சத் தொடர்க்கும் யாண்டும் ஈற்றின்கண் வினை நிற்பது அல்லது பெயர் நில்லாமையானும், அவற்றுள் பெயர்ப்பயனிலை கொள்ளும் எழுவாய்த் தொடர்க்கும் வினைத்தொடர்க்கும் ஈற்றில் பெயர் நிற்பினும், அப்பெயர்கள், நிலைமொழிக்குப் பயனிலையாகி மடங்கி நிற்றலான் அவை முதல்நிலையாகி இறுதிநிலைபெறும் இயல்பின ஆகாமையானும், இடைச்சொல் தொடர்களுள் சிலவற்றுக்கு ஈற்றில் பெயர் நிற்பினும் அவ்விடைச்சொற்கள் தனித்துப் பொருள் உணர்த்தும் ஆற்றல் இன்மையான் தாம் சேர்ந்து நின்ற சொல்லொடு கூடி ஒருசொல் எனவே கொள்ளப்படுதலின், இறுதிப் பெயர் ஆகாமையானும் ஈண்டுக் கூறிய சொற்றொடர்கள் எல்லாம் அன்மொழிக்கு இடம் ஆகாமையான், ஏனைய பெயரெச்சத்தொடர் உரிச்சொல்தொடர்களின் ஈற்று நின்ற பெயர்க்கண்ணே அன்மொழித்தொகை நின்று நடக்கும் என உணரப்படும் என்பது. உவமையும் வினையும் தொகாது நின்ற சொற்றொடர் பெயரெச்சத்தொடராக முடிதலின், ஒருபெயர் பற்றி நடக்கும் அன்மொழித்தொகை உவமத்தொகை ஈற்று நின்ற அன்மொழித்தொகை, வினைத்தொகை ஈற்று நின்ற அன்மொழித்தொகை, பெயரெச்சத்தொடர் ஈற்று நின்ற அன்மொழித்தொகை, உரிச்சொல்தொடர் ஈற்று நின்ற அன்மொழித்தொகை என நால்வகைப்படும் ஆதலின், அவை தாம் இரு பெயர் பற்றி நிற்பன ஆகிய பண்புத்தொகை நிலைக்களத்து நின்ற அன்மொழித்தொகை, உம்மைத்தொகை நிலைக்களத்து நின்ற அன்மொழித்தொகை வேற்றுமைத் தொகை நிலைக்களத்து நின்ற அன்மொழித்தொகை என்னும் அம்மூன்றுடன் எண்ண எழுவகைப்படும் என்பதாயிற்று. உதாரணம்: பவளவாய்- உவமத்தொகை ஈற்று நின்ற அன்மொழித்தொகை. திரிதாடி- வினைத்தொகை |