ஈற்று நின்ற அன்மொழித்தொகை. பாயினமேகலை- பெயரெச்சத்தொடர் ஈற்று நின்ற அன்மொழித்தொகை. திருநுதல்- உரிச்சொல் தொடர் ஈற்று நின்ற அன்மொழித்தொகை. அவைதாம் பவளம் போலும் வாயை உடையாள் எனப் பொருள்படுமாறு பவளவாயாள் எனவும், திரிந்த தாடியை உடையான் எனப் பொருள்படுமாறு திரிதாடியான் எனவும், பாயின மேகலையை உடையாள் எனப்பொருள்படுமாறு பாயினமேகலையாள் எனவும், அழகியநுதலை உடையாள் எனப் பொருள்படுமாறு திருநுதலாள் எனவும் விரியும். இனி உவமத்தொகையுள் இருமொழியும் பெயராக நிற்றலின் அவ்விருபெயரும்பற்றி அன்மொழித்தொகை நடவாமை என்னையெனின் இருபெயர்பற்றி நடக்கும் அன்மொழித்தொகையுள் வெளியது என்னும் பண்புடைப் பொருட்பெயரை ஆடை தொடர்ந்து நின்று முதல்நிலை ஆயினாற்போலவும், தகரமாகிய பொருட்பெயரை ஞாழல் தொடர்ந்துநின்று முதல்நிலை ஆயினாற்போலவும், பொன்னாகிய பொருட்பெயரைத் தொடி தொடர்ந்துநின்று முதல்நிலை ஆயினாற்போலவும் பவளமாகிய உவமைப்பெயரை வாய் தொடர்ந்து நின்று முதல்நிலை ஆகாமல், அவ்வுவமைக்கும் பொருளுக்கும் பொதுப்பண்பாகிய நிறத்தையே தொடர்ந்து முதல்நிலையாய் நிற்றலானும், மகள் வாயை உடையளே அன்றிப் பவளத்தை உடையள் ஆகாமையானும், அத்தொகையுள் இருமொழியும் பெயராயினும் அன்மொழித்தொகை நிலைமொழிப்பெயரை முதல்நிலையாகக் கொள்ளாது முற்றுப்பெயரையே முதல்நிலையாகக் கொள்ளுதலான் அதன் கண்ணே நின்று நடக்கும் என்பது. இனி, ஈற்றுநின்ற பெயர் உவமத்தொகையுள் உவமைப் பெயரைத் தொடரா ஆயினும் அதன் பொதுப்பண்பைத் தொடர்ந்து நிற்றலானும், வினைத்தொகை பெயரெச்சம் உரிச்சொல் தொடர்களுள் வினையையும் பண்பையும் தொடர்ந்து |