நிற்றலானும் அன்மொழித்தொகை நிலைமொழியையும் பற்றி நடக்கும் எனக் கூறாமை என்னைஎனின், அவற்றுள் நிலைமொழிப்பொருள் ஈற்றுப் பெயரது பண்பும் தொழிலும் ஆதலேயன்றிப் பிறிது ஒருபொருள் எனப்படாமையான் அப்பெயரது விசேடணம் எனப்படுவது அல்லது அன்மொழித்தொகைக்கு முதல்நிலை ஆகா என்பது. அற்றேல், பண்புத்தொகையுள்ளும் நிலைமொழிப்பொருள் பிறிது ஒரு பொருளை உணர்த்தாது ஈற்றுப் பெயர்ப்பொருளையே உணர்த்தலின் அதன்கண்ணும் ஈற்றுநின்று நடக்கும் எனக் கூறல்வேண்டும் எனின், அத்தொகையுள் இருபெயரும் ஒரு பொருளையே உணர்த்தினும் ஈற்றுமொழி பொதுப்பெயராகவும் நிலைமொழி பண்புச் சொல்லாயினும் பண்புடைப் பொருளை உணர்த்தலான் சிறப்புப் பெயராகவும் நிற்றலான் ஆண்டு இருபெயரும்பற்றி நிற்குமெனல் அமையும் என்பது. இனி சேனாவரையர், வேற்றுமை உருபு முதலியன தொகுதலின் தொகை ஆயின எனின் இருந்தான்மாடத்து என உருபுதொக்கு நிற்பவும் அது தொகை எனப் படாமையானும், வேழக்கரும்பு கேழற்பன்றி என்புழித் தொக்கன இல்லை எனினும் தொகை என வேண்டப்படுமாகலானும் அது பொருளன்று என மறுத்து, அவ்வப்பொருள்மேல் இரண்டும் பலவும் ஆகிய சொற்கள் பிளவுபடாது ஒற்றுமைப்படத் தம்முள் இயைதலின் தொகையாயின எனவும் வேற்றுமைத்தொகை என்பது வேற்றுமைப் பொருளை உடைய தொகை என்றானும் வேற்றுமைப்பொருள் தொக்கதொகை என்றானும் விரியும் எனவும் உவமைத்தொகை உம்மைத்தொகை அன்மொழித்தொகை என்பனவும் அவ்வாறு விரியும் எனவும் கூறினார் ஆதலின், பாயினமேகலை முதலியவற்றுள் அச்சொற்கள் பிளவுபடாது ஒற்றுமைப்படத் தம்முள் இயையாமையின் அவை தொகை எனப்படா எனின் அது பொருந்தாமை கூறுதும்: |