பக்கம் எண் :

அன்மொழித்தொகை ஆராய்ச்சி25

ஐம்பால் அறியும் பண்பு தொக்கது எனவே கொள்ளப்படலானும், ஐம்பாலும்
பொதுவகையான் அறிதற்கு ஓர் இடைச்சொல் இன்மையான். அது குறிப்பால்
கொள்ளக்கிடத்த லானும், அங்ஙனம் கொள்ளாவிடின், வேழத்தினது கரும்பு, வேழத்தை
உடைய கரும்பு என யாதானும் ஒரு வேற்றுமை கொள்ளும் அன்றிக் கரும்புடன்
இயைந்து ஒரு பொருளை உணர்த்தாமையானும், அவ்வியற்கை குறிப்பு வினையுள்
பிறசொல் கொண்டு விரித்துக் காட்டுமாறு போல, ‘ஆகிய’ என்னும் பிறிது ஒரு
சொற்கொண்டு காட்டப்படலானும் அவையெல்லாம் தொகை மொழியாம் என்பதும்,

‘பாயினமேகலை’ முதலியனவும் அவ்வாறே அன்மொழியினது தொகுதலும்
அம்மொழி நிலையாது அன்மொழி நிலையல் ஆகிய ஒருபொருளை உடைய
ஒருசொல்நடையும் பெற்று நிற்றலான் அவை அன்மொழித்தொகை ஆதற்கு இழுக்கு
இன்று என்பதும் உணரப்படும்.

இன்னும் ஆசிரியர் யாண்டும் அன்மொழித்தொகை தொகாநிலை பற்றி நில்லாது
எனக் கூறாமையானும், பாயினமேகலை- பொய்யாமொழி- திருநுதல்- தடமுலை- முதலிய
பல அன்மொழித்தொகை சான்றோர் செய்யுளின்கண் பயின்று வரலானும், உலக
வழக்கினும் ‘பெரியகுளம்’ என ஊரை உணர்த்தி நிற்றலானும், பேராசிரியர்சொல் பற்றி
ஆகுபெயர் எனக்கொள்ளின் மேகலை, மொழி, நுதல், முலை, குளம் எனத் தனித்துக்
கூறினும் மேகலையை உடையாள், மொழியைஉடையாள், நுதலை உடையாள், முலையை
உடையாள், குளத்தை உடையஊர் என உணர்த்தல் வேண்டும், அங்ஙனம் உணர்த்தா
என்பது யாவர்க்கும் உடன்பாடு ஆதலின் ஆகுபெயர் எனப்படாமையானும்,
அன்மொழித்தொகை பெயரெச்சம் உரிச்சொல்தொடர் என்னும் தொகாநிலைச்
சொற்றொடர்களின் ஈற்றின்கண் நிற்றலும் அமையும் என்பது.