இனிப் பண்புத்தொகைக்கண்ணும் உம்மைத்தொகைக்கண்ணும் வேற்றுமைத் தொகைக்கண்ணும் ஈற்றும் அன்மொழித்தொகை நின்று இயலும் எனக்கூறின், ஆண்டுத் தொக்க பண்பின் இயற்கைக்கண்ணும் உம்மையின்கண்ணும் வேற்றுமை உருபின்கண்ணும் அன்மொழித்தொகை நிற்கும் எனவும், ஈற்றும் என்பது கூறிய அல்லாத உவமத்தொகை ஈற்றையும் வினைத்தொகை ஈற்றையுமே உணர்த்தும் எனவும் கருதி அவ்வாறு கூறாராய், அவை தொக்க மொழிபற்றி நிற்கும் என்பது அறிவித்தற்கும் ஈற்றும் என்பது ஏனைத்தொகைநிலைத் தொடருடன் தொகாநிலைத்தொடர்களின் ஈற்றையும் உணர்த்துதற்கும், |
எனக்கூறினார். இனி உம்மைதொக்க, வேற்றுமைதொக்க என்றாற் போலப் பண்புதொக்க என இறந்த காலத்தால் கூறின், ஆண்டுத் தொக்க உம்மும் வேற்றுமை உருபும் பிறிது ஒரு காலத்து விரிப்பின் விரியுமாறுபோலப் பண்பின் இயற்கையும் பிறிது ஒருகாலத்து விரியும் எனப் பொருள்படும் ஆதலின் அதனை ஒழித்து அப்பண்பின் இயற்கையை உணர்த்துதற்கு ஓர் இடைச்சொல் இன்மையின் அது முக்காலத்தும் தொக்கு நிற்றலை அறிவித்தற்கு முக்காலத்துக்கும் பொது ஆகிய செய என்வாய்பாட்டான் ‘பண்பு தொக’ எனக் கூறினார். அற்றேல், வெளியது ஆகிய ஆடை எனவும், அகரம் எனப்படுவதாகிய ஈறு எனவும் முன்னர் விரித்துக் கூறியது என்னைஎனின் கூறுதும்: கரும்பார்ப்பான், கரும்பார்ப்பனி, கரும்பார்ப்பார் கருங்குதிரை, கருங்குதிரைகள், என்பன கரியனாகிய பார்ப்பான், கரியளாகிய பார்ப்பனி, கரியராகிய பார்ப்பார், கரியது ஆகிய குதிரை, |