கரியன ஆகிய குதிரைகள் என்னும் பொருள்பட நிற்றலான் ஆண்டுக் கருமை என்னும் பண்பின்கண் ஐம்பாலுள் யாதானும் ஒருபால் அறியும் ஈறு தொக்கது எனக்கொள்ளின் அதுமாத்திரம் விரிதல் வேண்டும் அன்றிப் பிறிதுஒருபால் விரிதல் பொருந்தாது; பொருந்துமெனின் பால்வழுவாக முடியும்; அதனால் வியங்கோளுள் ஐம்பாலுக்குப் பொதுவாகிய இறுதிநிலை ஒன்று உளதாயினாற்போல ஆண்டும் ஐம்பாலுக்கும் பொதுவாக ஒன்று உளதெனக் கொள்ளல் வேண்டும்; அது சொல் வடிவமாக இன்மையின். அப்பண்பு ஐம்பாற்பொருளையும் பொதுவகையான் உணர்த்தும் என்றும், வருமொழிநோக்கி ஒருபாலுக்கு உரித்தாகும் என்றும் ஆசிரியர் கொள்வார் ஆயினர். அஃது ‘ஐம்பால் அறியும் பண்பு தொகுமொழி’ தொல். 482 எனவும், ‘புணரியல் நிலையிடை உணரத் தோன்றா’ தொல்.482 எனவும் அவர் கூறுமாற்றான் அறியப்படும். அவ்வாற்றான் அப்பண்பின்கண் ஐம்பாலையும் பொதுவகையான் அறியும் இயற்கை தொக்கது எனப்படலானும், அதனைப் பொதுவகையான் உணர்த்தற்கு உரிய சொல் இன்மையானும் அது பொருள் விளங்குமாறு பிறிது ஒருசொல் கொண்டு விரித்துக்காட்டப்பட்டது அன்றித் தன்சொல்லான் விரித்துக் காட்டப்பட்டது அன்றாம். அவ்வாறே வினைத் தொகையுள்ளும் செய்யும் செய்த என்னும் சொற்களைப் பொதுவகையான் உணர்த்தற்குரிய கால இடைநிலை இன்மையின் முக்காலத்தையும் பொதுவகையான் உணர்த்தும் வினையின் இயற்கை தொக்கது எனப்படும் ஆதலான் அது பிறிதுஒரு கால இடைநிலையான் விரித்துக் காட்டப்படும் என்பது. அற்றேல், பண்புதொகு கிளவி என்றலே அமையும்: தொகவரூஉம் கிளவி எனல் மிகையாம் எனின், அங்ஙனம் கூறின் பண்பு தொகுதல் நிலைமொழிக்கண்ணதே ஆதலின் அது வருமொழியைத் தழுவாமையான் அவ்வாறு கூறாராய், அப்பண்பு தொகுதற்கு இருமொழியே ஏதுவாகி வருதலின் தொக வரூஉம் கிளவி என்றார் என்பது. |