பக்கம் எண் :

28 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இனி, உம்மைதொக்கபெயர் வேற்றுமைதொக்கபெயர் என்றாற் போலப்
பண்புதொக வரூஉம்பெயர் எனக்கூறின் அஃது இருமொழியும் பெயராம் எனஅறிய
நின்ற அகரஈறு முதலியவற்றையே உணர்த்தும் அன்றிக் கருங்குழல் முதலியவற்றுள்
நிலைமொழி பெயர் என அறியப்படாமல் விகாரப்பட்டு நின்றமையின் அவற்றை
உணர்த்தாது எனக்கருதி, அவை பெயர்என அறியப்படாது நிற்பினும் அவற்றையும்
அன்மொழிபற்றி நிற்கும் என்பது அறிவித்தற்கு அச்சொற்களையும் தழுவுமாறு பெயர்
எனக் கூறாது பொதுப்படக் கிளவி எனக் கூறினார்.

இனிக் கிளவிக்கண்ணும் பெயர்வயிற்கண்ணும் எனக் கூறின் அஃது இன்னோசை
உடைத்து ஆகாமையான் அது பெறற்பொருட்டுக் ‘கிளவியானும்- பெயர் வயினானும்-
எனக்கூறினார்.

இனிப் பண்பு தொக என்றாற்போல, உம்மைதொக- வேற்றுமைதொக-
எனக்கூறின், அப்பண்பின் இயற்கை போலவே உம்மையும் வேற்றுமை உருபும்
எக்காலத்தும் விரிந்து நில்லா எனப் பொருள்படும் ஆதலின் அவ்வாறு கூறாராய்
அவை தொக்கன ஆயினுங் விரிக்கும் இடத்து விரியவும் பெறும் என்பது அறிவித்தற்கு
‘உம்மை தொக்க’ ‘வேற்றுமைதொக்க’ என இறந்த காலத்தால் கூறினார்.

அற்றேல், பண்பு தொக வரூஉம் என்றாற்போல, உம்மை தொக்கு வரூஉம்-
வேற்றுமை தொக்கு வரூஉம்- எனக்கூறல் வேண்டும் எனின், உம்மை வேற்றுமைகளின்
வினை ஆகிய தொக்கு என்னும் செய்து என்எச்சம் பெயரின் வினையாகிய ‘வரூஉம்’
என்பதனோடு முடியாமையானும், தொக்க எனக் கூறலானே அவ்விரு மொழியும் உணப்
படலானும் அவ்வாறு கூறாது ‘தொக்க பெயர்’ எனக் கூறினார் என்பது.