அல்லாதமொழி எனல் கூடாமையானும், அல்லாதமொழி ஒன்று தொக்கது எனக் கொண்டு அதன்பொருளை அத்தொக்க சொல் உணர்த்தும் எனக் கூறலினும் அத்தொகைச்சொல் ஆகுபெயர்போலத் தன் பொருளை உணர்த்தாது பிறிதுஒரு பொருளை உணர்த்தும் எனக் கூறலே முறையன்றி அன்மொழித்தொகை எனப் பெயர் கூறல் பொருந்தாமையானும், வேற்றுமை உருபும் உவம உருபும் உம்மையும் தொக்கசொல் அல்லாத மொழிகளே ஆதலின் அவை தொக்க வேற்றுமைத்தொகை முதலியவற்றையும் அன்மொழித்தொகை எனல்வேண்டும் ஆதலானும் என்பது. அற்றேல், அதன்பொருள் யாதோ எனின், ஆசிரியர் முன்னர் வேற்றுமைவழி கூறிப் பின்னர் அவ்வேற்றுமை அல்லாத வழி எனப் பொருள் படுமாறு அல்வழி எனப்பெயர் கூறலானும், அவ்வாறே உயர்திணை என முன்னர்க் கூறி அஃது அல்லாத திணை எனப்பொருள்படுமாறு அஃறிணை எனக் கூறலானும், ஈண்டும் வேற்றுமைத்தொகை உவமத்தொகை வினைத்தொகை பண்புத்தொகை உம்மைத்தொகை என முன்னர்க் கூறிப் பின்னர் அன்மொழித்தொகை எனக் கூறலான் முன்னர்க்கூறிய வேற்றுமைஉருபு இடைச்சொல்லும் உவம உருபு இடைச்சொல்லும் இடைச்சொல் பொருண்மையுடைய வினையின் இயற்கையும் பண்பின் இயற்கையும் உம்மை இடைச்சொல்லும் அல்லாத மொழி ஆகிய இறுதிநிலைஇடைச் சொல்லின் தொகை எனலே பொருளாம் என்பது. அற்றேல், முன்னர் கூறிய வேற்றுமை உருபு முதலியன அல்லாத இடைச்சொற்கள் பிறவும் உளவாக இறுதிநிலை இடைச்சொல்லே தொகும் எனல் என்னையோ எனின், கூறுதும்; ஆசிரியர் அகத்துஉறுப்பாக ஆயினும் புறத்துஉறுப்பாக ஆயினும் பெயர்வினையைச் சார்ந்து நின்று பொருள் உணர்த்தும் இடைச்சொற்கள் தொக்குநிற்றலையே தொகை எனக் கொண்டார் ஆதலானும், தொகை என்பது குறைதல் |