எனப் பொருள்படுமாறு முன்னர் கூறினாம் ஆதலின் ஒன்றதற்கு உறுப்பு ஆகாத இடைச்சொல் இன்றாயின் அது கெட்டது எனப்படுமே அன்றித் தொக்கது எனல் பொருந்தாமையானும், புணரியல் நிலையிடைப் பொருள்நிலைக்கு உதவும் இடைச்சொல் முதலாக நின்ற எழுவகை இடைச்சொற்களுள் அசை நிலைக்கிளவியும் இசைநிறைக்கிளவியும் தத்தம் குறிப்பால் பொருள் செய்குநவும் உறுப்பு ஆகாமையானும், பொருள் நிலைக்கு உதவும் சாரியை உறுப்பாயினும் தனக்கென வேறு பொருள் இன்மையானும், வேற்றுமை உருபும் உம்மையும் முன்னர்க் கூறப்பட்டமையான் அன்மொழி என்பது எஞ்சி நின்ற இறுதிநிலை இடைச்சொல்லையே உணர்த்தும் என்பது. அற்றேல், இறுதிநிலைத்தொகை எனப் பெயர் கூறாமை என்னை எனின், அங்ஙனம் கூறின் பல்லோர் படர்க்கையை உணர்த்தும் இறுதிநிலையும் தொகும் எனப்படுதலானும், யாண்டும் அன்மொழித்தொகை பல்லோர் படர்க்கையை உணர்த்தாமையானும், பண்புத்தொகையுள்ளும் ஐம்பால் அறியும் இறுதிநிலை தொக்கு நிற்றலின் அதனையும் இறுதி நிலைத்தொகை எனல் வேண்டுமாதலானும், அங்ஙனம் கூறின் அவ்விரு தொகைக்கும் வேறுபாடு அறியலாகாமையானும், பிறவாற்றானும் அன்மொழித்தொகை எனப் பெயர் கூறினார் என்பது. இன்னும் இதன் பொருளை விரிப்பின் பெருகும் ஆதலின், கூறிய கொண்டு பிறவும் உய்த்து உணரப்படும் என்பது. [குறிப்பு:- 8ஆம்பக்கம் 17ஆம் அடியில் 1102ஆம் குறளில் அணியிழை எனவும் என்பதனை இணைக்க.] |