எனக்கூறுதல் காண்க. உவமை பற்றியே அன்றிப் பொருள் பற்றியும் ஐயவணி வருமென்பது சில ஆசிரியர் கருத்து.இனி, ‘கனங்குழை’ என்பதை ஆகுபெயரென்ற பரிமேலழகர்’ ‘தொடலைக் குறுந்தொடி’ என்பதை அன்மொழித் தொகை என்ற தென்னையெனின், குறுந்தொடி என்பது அன்மொழித்தொகைப்பொருளை உணர்த்தி நிற்பத் தொடலை என்பது அதனை விசேடித்து வந்ததாகக் கொள்வர் என்று கருதியே அதற்கு ‘மாலைபோலத் தொடர்ந்த சிறு வளையலை உடையாள்’ எனத் தாம்கொண்ட பொருளை இனிது விளக்குமாறு ‘தொடலைக் குறுந்தொடி- அன்மொழித்தொகை’ எனத் தொகை நோக்கிக் கூறினார் என்பது. இங்ஙனே சேனாவரையரும் ‘மக்கட்சுட்டு’ என்பதற்குத் தாம்கொண்ட பொருளை இனிது விளக்குமாறு மக்கள் என்னும் சுட்டு யாதன்கண் நிகழும், அது மக்கட்சுட்டு எனப் பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை எனத் தொகை நோக்கிக் கூறினார். இவையும் பெயரை நோக்குமிடத்து ஆகுபெயராய் அடங்கும் என்க. ஆதலின் அன்மொழித்தொகைப் பொருளில் ஆகுபெயர் வரும் என்பது தேற்றம். |