பக்கம் எண் :

37

பகுபத உறுப்பிலக்கணக் குறிப்புகள்
(எழுத்தும் சொல்லும் சொல்லும் செய்தித்தொகுப்பு.)
 

சொற்கள் பகுபதம், பகாப்பதம் என்று இரு பிரிவின. பகாப்பதம் பிரிக்க
முடியாதது. பகுபதம் பிரிக்கக் கூடியது. பகுபதக் கூறுகள் பகுதி, விகுதி, இடைநிலை
சாரியை, சந்தி விகாரம் என்ற ஆறு தலைப்பில் அடங்கும்.

பகுதியாவது:-

தன்னியல்பின் நிற்பது. இது பகுபதத்தின் முதலுறுப்பு ஆதலின் முதனிலை
யெனவும் பெயர் பெறும்.

விகுதியாவது:-

பகுதியின் பொதுவாய் இருக்கும் தன்மையை வேறுபடுத்தி ஒன்றற்கே சிறப்பாக
உரியதாக்குவது. இது பகுபத இறுதி உறுப்பு ஆதலின் இறுதிநிலை யெனவும்
பெயர்பெறும்.

இடைநிலையாவது:-

பகுதிக்கும் விகுதிக்கும் இடையதாய்ப் பெரும்பாலும் காலம் காட்டி வினைக்கு
இன்றியமையாது வேண்டப்படும் உறுப்பு. பெயரிடையும் இடைநிலை அருகி வரும்.

சாரியையாவது:-

பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடைப்பட்டு ஓசை எளிமைக்காகவும்
இனிமைக்காகவும் வருவது.

சந்தியாவது:-

பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே ஓசை விட்டிசைக்காமல் பொருந்துவதற்
இடைவந்து புணரும் உறுப்பு. இவ்விடம் மாறி வருவதனை எழுத்துப்பேறு என்ப.

விகாரமாவது:-

பகுபதத்தின் பகுதிக்கண்ணும் சந்தி உறுப்பின்கண்ணும் ஏற்படும் வேறுபாடு
ஆகும். பிறவுறுப்பிலும் சிறுபான்மை இது நிகழும்.