மானுடமாதர் ஆதல் தெளிந்த தலைமகன்’ எனப் பின்னர்க் கூறல் பொருந்தாமையானும், ‘கூற்றமோ கண்ணோ பிணையோ’ எனப் பின்னர் வருமிடத்து ஐயநிலை உவமை என எழுதிய பரிமேலழகர் அணங்கு முதலிய உவமையாயின் இக்குறள் முன்னர் இருத்தலின் ஈண்டு எழுதுதல் வேண்டும், அங்ஙனம் எழுதாமையானும் என்பதுஅற்றாயின், கனங்குழை மாதர் என இருபெயரொட்டாகக் கொண்டு கனவியகுழையை உடையாளாகிய மாதரோ அணங்கோ மயிலோ என்று ஐயம் உறுதலாகப் பொருள் உரைத்துத் தோன்றாநின்ற இவ்வுரு என ஐயப் பொதுச் சொல் வருவித்துக் கூறின் வழுவாகாமையான், கனங்குழை என்பதனை அன்மொழித்தொகை என்றே கோடும் எனின், அங்ஙனம் உரைத்தாலும் அமையாது. என்னை? உயர்திணையோ அஃறிணையோ எனத் திணைக்கண் ஐயுறினும் அங்ஙனம் ஐயுறுதலே அன்றி ஆணோ பெண்ணோ எனப் பாற்கண் ஐயுறினும் அஃது ஒருவர் உள்ளக்கருத்தைப் பிறர் ஒருவர் அறியாத ஒருதலைக்காமமாகிய கைக்கிளை ஆகாமையால், காமப்பாலுள் நிகழ்ந்த ஐயக்கட்சியாக முடிந்து, தெய்வமகளோ மக்கள் உள்ளாளோ எனக் காமவேட்கையோடு தலைமகன் காணும் ஐயக்காட்சி ஆகாது நிற்றலின் அவ்வையத்தைக் காமப்பாலில் கூறற்கு ஓர்இயைபும் இன்மையானும் இதுவன்றிக் கனவிய குழையினை உடைய மாதர் என இருபெயரொட்டாகக் கூறலும் எவ்வயின் பெயரும் வெளிப்படத் தோன்றலே செவ்விது அன்றித் தோன்றா நின்ற இவ்வுரு என எழுவாய் வருவித்து உரைத்தலும் சிறப்பு ஆகாமையானும் என்பது. திணைபால் இடத்து ஐயங்கள் கைக்கிளைத் திணைக்குப் பொருந்தாமையும் ஏனை ஐயம் பொருந்துமாறும் என்னையோ எனின், பிணி மூப்பு இறப்புக்கள் இன்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மையனாகிய தலைமகனுக்கு அத்தன்மையள் ஆகிய தலைமகள் இடத்தன்றி இன்ன பொருள் என அறியப்படாது |