பக்கம் எண் :

6 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

நின்ற திணைபால் ஐயப்பொருளிடத்துக் காமம் நிகழாமை யாவர்க்கும் ஒப்ப முடிந்தது
ஆகலானும், பொழில் விளையாட்டு விருப்பான் ஆயம் நீங்க அதன்கண் தமியளாய்
நின்றாளை வேட்டை விருப்பான் இளையார் நீங்கத் தமியனாய் வந்து கண்ணுற்ற
தலைமகன் அவளை வனப்பு மிக்க ஒரு மகளெனவே கண்டு அக்காட்சி முன் கண்டறி
அளவன்றிச் சிறந்தமையான் உயர்திணைப் பெண்பால் என்னும் பொது உணர்ச்சிக்கண்
ஐயமின்றி, அப்பெண்பாலின் பகுதி ஆகிய திருமகள் முதலிய தெய்வமாதரோ அன்றி
மானுடமாதரோ, எனச் சிறப்பு உணர்ச்சிக்கண்ணும் இம்மகளது உரு முதலிய தன்மைகள்
மகளிர்க்கு இயல்பாய் அமைந்தவையோ அன்றி ஆய்மயில் முதலியவற்றின் தன்மையோ
அன்றி எனப் பண்பின் கண்ணும் ஐயம் நிகழும் என நூலோர் கூறுதலானும்
உணரப்படும் என்பது.

ஐயம் நிகழுதல் அவ்வாறாயின் தெய்வத்தன்மையால் காமம் நிகழ்தற்கு இடனாக
நின்ற இருதிணைக்கும் பொதுவாகிய கனவிய குழையை உடைய ஓர் வடிவம் என
அன்மொழித்தொகையால் பொருள் கொண்டு ஐயப்பொதுச் சொல் ஆக்கல் இலக்கணமாம்
பிற எனின், தமியளாய் நின்றாளைத் தமியனாய்ப் பகற்கண் கண்ட தலைமகன் சிறிய
வடிவினை உடைய அணியைக் கனங்குழை எனச் சிறப்பான் உணர்ந்து அதனினும்
பெரிய வடிவினை உடைய பொருளை இற்று என உணராது இருதிணைப் பொதுவாக
உணர்ந்தான் எனல் காண்டல்விரோதமாக முடிதலானும், மகளிர் என உணராஇடத்துக்
கீழோர்க்கும் காமம் நிகழாமை கண்கூடு ஆதலின் தலைமகனுக்கு ஆண்டுக் காமம்
நிகழும் எனல் உலகியலோடு மலைதலானும் அது பொருந்தாமையான் அணங்குகொல்
மயில்கொல் ‘மாதர்கொல் என்னும் பொருள் ஐயத்துக்குக் கனங்குழை
அன்மொழித்தொகைப் பொருளை உணர்த்தின் ஐயப்பொதுச்சொல் ஆகாது முன்னோர்
நூலின் முடிபொடு முரணும் என்பது