வினைச் சொல்லாலும், பெயர்ச் சொல்லாலும், இனத்தைக் குறிக்கும் அடைச்சொல்லாலும், வேறுபடுத்தி அறியமுடியாத பல பொருளைக் குறிக்கும் ஒருசொல்லை ‘இன்னது இது’ எனச் சிறப்பாக விதந்து சொல்லவேண்டும். உயர்திணைக்கண்ணும், அஃறிணைக்கண்ணும் பல பொருளை உள்ளடக்கி இருக்கும் ஒன்றை அதிலுள்ள தலைமையாக உள்ள பொருள் அடிப்படையிலோ, மிகுதியாக உள்ள பொருள் அடிப்படையிலோ பெயரிட்டு அழைக்க வேண்டும். ஒரு பொருளின் இனத்தைக் குறிக்கும் பண்புச் சொல்லைச் செய்யுளில் பயன்படுத்தலாம். உயர்திணையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான சொல் அடுத்துவரும் பெயர்ச்சொல்லாலும் வினைச்சொல்லாலும் ஆண்பாலுக்கே உரியதாகவும் பெண்பாலுக்கே உரியதாகவும் கொள்ளப்படும். இனமாகிய பல பொருள்களில் ஒன்றை விதந்து எடுத்துக் கூறினால் அச்சொல் தன் பொருளுக்கு இனமாகிய பிற பொருளை உணர்த்துதலும் உணர்த்தாமையும் உரித்து. விளக்கம் : தொல்காப்பியன், முதல் தமிழ்நூல் ஆசான், மொழியியல் மூதறிஞன் என்று பல பெயர்களும் ஒருவரைக் குறிக்கும் போது ஒருவினையே கொடுக்கவேண்டும். தொல்காப்பியன், முதல் தமிழ்நூல் ஆசான் மொழியியல் மூதறிஞன் கூறினான் குழல் ஊதினான், மேளம் கொட்டினான், தாளம் போட்டான் என்ற வெவ்வேறு வினைச் சொற்களை ஏற்கக் கூடிய இசையைக் குறிக்கும் சொற்களைப் பொதுவாகக் கூறும் போது இசைக்கருவிகள் வாசித்தான் என்றும் குழலும் மேளமும் என பன்மையாகக் கூறும்போதும் வாசித்தான் என்றும் பொதுவினையால் கூறவேண்டும். |