தன்னதன்றிப் பிறழாமல் பொருட்டுறுத்த வாகுஞ் சார்உவமப் பொருள்உணர்ச்சிப் பொருடிணைஓர்ந் திடப் பாட்டின் அனையும்,வெளிப் படைஉள்ளு றையெனவே உவமம் இருவகையாம்; இறைச்சிபொருட் புறத்தின்அகன் றிடுமே. [44] | இது பொருள் வகை, துறை, உவமவகை ஆகியவற்றை விளக்குகின்றது. உரை: பொருள், கூறுபாடு என்பது மேலே கூறியபடி இந்தத் திணைக்கு இது உரியது என்று கொள்ளாமல் எல்லாத் திணைக்கும் பொதுவாக உரிய வகையில் சொல் அமையும்படிச் செய்தல் ஆகும். ‘துறை’ என்பது ஐந்து வகை நிலத்தினுக்கும் உரிய கருப்பொருளோடு (மக்கள், விலங்கு, தெய்வம் போன்றவை) பிறவும் சேர்த்துக் கூறினாலும் இலக்கணம் வழுவாதபடி அமைத்தல் ஆகும். உவமப் பொருளும் உணர்ச்சிப் பொருளும் அறிந்து கொள்ளுமாறு பாட்டில் வரும் உவமை என்பது 1. உள்ளுறை உவமம், 2. வெளிப்படை உவமம் என இரண்டாகும் உணர்ச்சிப் பொருள் (இறைச்சிப் பொருள்) என்பது கருப்பொருளின் கண் பிறக்கும். விளக்கம் : இது நம்பியகப்பொருள் 233, 234, 236, 237 ஆகிய சூத்திரங்களைத் தழுவியது. ‘இறைச்சிப் பொருட் புறத்தின் அகன்றிடுமே’ என்பது நம்பியகப்பொருளில் காணப்படவில்லை. |