(ஓஒதல் வேண்டும்-குறள் 653) என்ற சீரில் ஓ ஒ என்று அளபெடை ஒரே சீராகக் கொள்ளப்படுகிறது. எனவே மூன்று மாத்திரை இருப்பதால் மூன்று மாத்திரை பெறும் ஓரெழுத்தாகவும் (வடமொழியில் புலுதா இருப்பது போல்) ஒரே வழிக் கொள்ளவேண்டி நேருகிறது. ஆயினும் இவர் நன்னூல், இலக்கண விளக்கம் போல அளபெடைக்கு மூன்று மாத்திரை என்று கூறவில்லை. அளபெடை என்பது தனி ஒலியன்று. அதுவும் பொதுநிலை ஒலியே. எனவே தான் நெட்டெழுத்து ஏழும் அதற்கு இணையான குற்றெழுத்துப் பெற்று உயிரளபெடை ஏழு தனிப்பட்ட ஒலியாக (ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ) அமைகிறது. அளபெடை, நெட்டெழுத்தின் விகாரமாகவே கொள்ளப்பட்டது. அதாவது அளபெடையை ஒலி உறழ்ச்சியாகக் (Phonetic free variation) கருதுகிறார் என்று கொள்ள வேண்டும். இதையே சிவஞான முனிவரும் முதற்சூத்திர விருத்தியில் (ப. 26) ‘அளபெடை அந்நெட்டெழுத்தோடு குற்றெழுத்து ஒத்து நின்று நீண்டிசைப்பது ஒன்றாயினும் மொழிக்காரணமாய் வேறுபொருள் தராது இசை நிறைத்தன் மாத்திரைப் பயத்ததாய் நிற்றலின் வேறு எழுத்தென வைத்து எண்ணப்படாதாயிற்று என்பது நுண்ணுணர்வான் உணர்க’ என்று வலியுறுத்தியுள்ளார். ஆனால் அவரே நன்னூலுக்கு உரையெழுதும்போது சங்கரநமச்சிவாயரை ஒட்டி சொல்லிசைஅளபெடை என்ற ஒரு வகையைக் குறிப்பிட்டுள்ளார். நசைஇ‘விரும்பி’ என்ற சொல்லிசை அளபெடை ‘நசை’ (விருப்பம் அல்லது விரும்பு) என்ற நெட்டெழுத்து இறுதிச் சொல்லோடு மொழிக்காரணமாய் வேறுபொருள் தருகின்றது. எனவே இங்கு அளபெடையைத் தனி எழுத்தாகக் (Phoneme) கொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறே தாஅம் ‘தாவும்’ (அகம். 115.12) : தாம் ‘படர்க்கைப் பன்மை’ (புறம் : 14.16) |