சுவாமிநாதம்289அணியதிகாரம்
 
196. வரிகள்இரண் டிரண்டாய்மேல் கீழ்இடைஒன் றகற்றி
     வாசிப்பநேர் சொல்பாட் டொத்தல்கோ மூத்திரி;
ஒருபதம்எட் டெழுத்தாய்நான் கடிக்கவியைஎட்டெட்டு
     ஒருநிறையாய் மேல்கீழ்கீழ் மேல்எட்டெட்டு அறையின்
தரவெழுதி நான்முகமுஞ் சொல்லினும்பாட் டாதல்
     சருப்பதோபத் திரம்;ஒருபாட் டுஈறுதியதாய்
இரையினும்அப் பாட்டாதல் மாலைமாற்று; ஒருசொல்
     எழுத்துஓரொன்று அறப்பொருள்வே றாம்எழுத்துச் சுதமே
                                                [3]

கோமூத்திரி, சருப்பதோபத்திரம், மாலைமாற்று, எழுத்துச்சுதம்
ஆகியவற்றை விளக்குகின்றது.

     உரை : இரண்டு இரண்டு வரியாக ஒரு செய்யுளை எழுதி மேலும்
கீழும் ஒன்று இடையே விட்டுப்படித்தாலும் ஒரு பாட்டாகக் கருதப்படுவது
கோமூத்திரி. ஓரெழுத்து ஒருசொல் எட்டு உடைய நான்கு அடிகள் கொண்ட
ஒரு பாட்டை வரிசைக்கு எட்டெட்டுச் சொற்களாக எழுதி மேலும்
அதேபாட்டை மேலுள்ள வரியைக்கீழாகவும் கீழுள்ள வரி மேலாகவும் அதே
முறையில் வரிசைக்கு எட்டெட்டுச் சொற்களாக எழுதி அது மேலே இருந்து
கீழே படித்தாலும், கீழே இருந்து மேலே படித்தாலும், இறுதியில் தொடங்கி
முதல் வரை படித்தாலும் பொருள் தரும்படி அமைந்தால் சருப்பதோ
பத்திரம் எனப்படும். ஒரு பாட்டைக் கடைசியி லிருந்துபடித்தாலும் அதே
பாட்டாகவே அமைந்தால் அது மாலை மாற்று எனப்படும். ஒரு சொல்லில்
உள்ள எழுத்துக்கள் ஒவ்வொன்றை நீக்க அது வெவ்வேறு பொருளைத்
தரும்படி அமைத்தால் எழுத்துச் சுதம் எனப்படும்.

     விளக்கம் : சித்திரக் கவிகளுக்குரிய விளக்கம் தண்டியலங்கார
உரையில் மட்டுமே காணப்படுகிறது.

     3-வது வரியில் உள்ள ‘இறாதி’ என்பதை ‘ஈறாதி, (ஈறு + ஆதி) என்று
கொள்ள வேண்டும்.