அவற்றை வேறொரு முறையில் சொல்லும்போது அச்சொற்களும் இரண்டு பொருள் உடையதாகின்றன. உயிர்ப் பொருளைச் ‘சீவான்மா’ என்றும் மெய்ப் பொருளைப் ‘பசு’ என்றும் கூறுவது மெய்ப் பொருளாரின் குழூஉக்குறி. உயிர், மெய் என்பன இலக்கண ஆசிரியர்களின் குழூஉக்குறி. இங்கும் இச்சொற்களுக்கு இயல்பான பொருளும் வேறு பொருளும் இருக்கின்றன. ஒரு குழுவினர் இயல்பான சொல்லுக்குப் பதிலாக வேறொரு சொல்லைப் பயன் படுத்துவதும் குழூஉக்குறி. பொற்கொல்லர் பொன்னைப் பறி என்று கூறுவதும் இத்தகையது. ஏனெனில் பறி என்பதற்கும் இரு பொருள் ஏற்பட்டு விடுகின்றது. ‘இப்பொருளை அறிதற்கு அமைந்து கிடந்த இச்சொல்லாற் சொல்லுதல் தகுதியன்று, வேறொரு சொல்லாற் சொல்வது தகுதியென்று நினைத்துக் கூறுதலால் தகுதி வழக்கு எனப்பட்டன’ என்று கூறும் சங்கரநமச்சிவாயர் விளக்கம் (நன்னூல் 267-ஆம் சூத்திர உரை) குழூஉக் குறிக்குப் பொருந்தாது. ஏனெனில் குழூஉக் குறியில் மேலே காட்டிய இரு வகையிலும் (கலைச்சொல்லாகவும் மாற்றுச் சொல்லாகவும்) பயன்படுமே தவிர ஒன்று தகுதியற்றது என்ற கருத்தே கிடையாது. நன்னூலார் ‘பல்வகைத் தாதுவின் உயிர்க்கு உடல் போற் பல சொல்லால் பொருட்கு இடனாக’ (268) என்று கூறியிருக்க இவர் ‘பல் வகைத்தாது உடற்கு உயிர் போல், என்று மாற்றிக் கூறியிருக்கும் நயம் குறிப்பிடத் தக்கது. நன்னூலார் ‘அணிபெறச் செய்வன’ (268.3) என்று பன்மையாகக் கூறியதை இலக்கண விளக்கத்தார் ‘செய்வது’ (162.3) என்று ஒருமையாக மாற்றினார். இவர் ‘செயும்’ என்ற பொது வாய்ப்பாட்டால் கூறி இருவர் மொழியிலிருந்தும் மாறுபட்டார். ‘குறிப்பு’ பற்றிய சூத்திரம் இலக்கண விளக்கத்தை (170) ஒட்டியது. ஏனெனில் இவரும் இலக்கண விளக்கத்தாரைப் |