ஒரே சொல்லைப் பொதுப்பொருளிலிருந்து பிரித்துச் சிறப்புப் பொருளில் பயன்படுத்துவதும் பொது மொழிச் சொற்களை ஒரு வரையறுத்த பொருளில் கலைச்சொற்களாக அறிஞர்கள் அமைத்துக் கொள்வதும் ஆகும் என்றும் (அதாவது திரி சொல்) கா. மீனாட்சி சுந்தரனார் விளக்கம் தந்துள்ளார். (‘சொற்பகுப்பு அன்றும் இன்றும்’ ஐந்தாவதுஆய்வுக்கோவை பக் 753, 754) உயிர் என்பது பொதுமொழிச் சொல். அது ஒரு இயற்சொல். அச்சொல் இலக்கணத்தில் வேறு பொருளைக் குறிக்கின்றது. இது பல பொருளுக்கு ஒரு சொல் என்ற வகையில் அடங்கும். மெய், உடம்பு, மெய்யெழுத்து; நெடில், நீண்டது, நெடில் எழுத்து போன்ற வேறு பல கலைச் சொல்லான உதாரணங்களும் இயற்பொருளும் கலைச் சொற்பொருளும் பெற்று இவ்வகையில் அடங்கும். மிடற்றில் திரிபு ஏற்படும் ஒலியை மிடற்று ஒலி என்று கூறுவது போல மூக்கில் மாற்றம் ஏற்படுவதை மூக்கொலி என்னாது மெல்லினம் என்பது ஒரு பொருளுக்கு இரண்டு சொல் என்ற பிரிவில் அடங்கும். ஒரு பொருளுக்கு இயல்பாக வழங்கும் சொல் ஒரு குறிப்பிட்ட துறையில் வேறொரு சொல்லாகக் கலைச்சொல் நிலையில் பயன்படுதலும் ஒரு பொருளுக்கு இரண்டு சொல்லாக அமைந்து விடும். இது நன்னூல் 270, 271, 272 ஆகிய சூத்திரங்களை ஒட்டி எழுந்தது. எனினும் இயற்சொல் ‘யார்க்கும் உணர் பொருளை விளக்கும்’ என்று கூறியது சற்றுப் புதுமையானது. இதுவும் ‘உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே’ (தொல். சொல். 393) என்ற கருத்து அடிப்படையில் எழுந்திருக்கலாம். |