38. | சொற்றமிழ்ப்பார் சூழ்நிலம்ஈ ராறுஒழிபார் பதினேழ் தோய் குறிப்பின் வருந்திசைச் சொற்;பொதுச்சிறப்பும் இரண்டு(ம்) முற்றுஇசையும் வடசொல்லே; யிவைஇரண்டும் விலக்கார் ஓரிருசொற் பொருள்உணர்த்திற் பெயர்ச்சொல்லாம்; பெயர்தான் அற்றஇடு குறியொடுகா ரணம்இரண்டின் மரபும் ஆக்கமுமே தொடர்ந்துவேற் றுமைக்குஇடனாய்த் திணைபான் முற்றுஇடத்து ஒன்றுஏற்பனவும் பலபொருள் ஏற்பனவு(ம்) முறைதரும்ஈ றால்ஈறின் முடிவால்ஆள் குவரே. (5) | திசைச்சொல், வடசொல் ஆகியவற்றின் இலக்கணமும் பெயர்ச் சொல்லின் பொது இலக்கணமும் கூறுகின்றது. உரை : செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டும் ஒழிந்த பதினேழு பகுதியைச் சார்ந்த நிலத்திலிருந்தும் அவர்கள் தம் குறிப்பினவாய் வழங்கும் சொல் திசைச் சொல்லாகும். பொது எழுத்தானும் சிறப்பு எழுத்தானும் வழங்குவது வடசொல். திசைச் சொல்லையும் வடசொல்லையும் விலக்கமாட்டார் (புலவர்). இடுகுறியும் காரணக்குறியும் மரபினையும் ஆக்கப்பாட்டினையும் தொடர்ந்து வேற்றுமை உருபு ஏற்பதற்கு இடமாக இருதிணை, ஐம்பால், மூன்று இடம் ஆகியவற்றுள் ஒன்று ஏற்றும் பல ஏற்றும் ஒரு பொருளையும் பல பொருளையும் உணர்த்துவது பெயர்ச் சொல்லாகும். விளக்கம் : திசைச்சொல் என்பதைக் கிளைமொழிச் சொல் என்று பலரும் கொள்கின்றனர். ஆனால் இவர் தரும் விளக்கப்படி அவ்வாறு கொள்ள முடியாது. இவர் நன்னூலாரைத் தழுவி இவ்வாறு விளக்கியுள்ளார். நன்னூலார் கருத்துப்படி திசைச்சொல்லைக் கிளைமொழிச் சொற்களாகக் கொள்ள முடியாது என்று கா.மீனாட்சிசுந்தரனார் மேலே குறிப்பிட்ட கட்டுரையில் காட்டியுள்ளார். தொல்காப்பியர் செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்துத் தத்தம் குறிப்பினால் வழங்குவது திசைச்சொல் என்றார் |