உரை : பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்ற ஆறினோடும் இவற்றை அடையும் சுட்டினாலும் வினாவினாலும் இடைச் சொல்லினாலும் உவமையினாலும் ன், ள், ஐ, இர், கள், முதலிய ஈறுகள் உயர் திணையையும் து, டு, று, வை, அ, கள் முதலிய ஈறுகள் அஃறிணையையும் உணர்த்தும். இந்த ஈறுகள் இல்லாத சொற்கள் இருதிணை ஐம்பாலை உணர்த்தும். முதற்பெயர் நான்கு, சினைப்பெயர் நான்கு, சினை முதற் பெயர் நான்கு, முறைப்பெயர் இரண்டு, தன்மை நான்கு, முன்னிலை ஐந்து; தான், தாம், எல்லாம் ஆகியவை ஆண்பால், பெண்பால், ஒன்றன் பால், பலவின் பால் ஆகியவற்றிற்குப் பொதுவாகும். விளக்கம் : பொருளால் வரும் பெயர்கள் - பொன்னன், முடியன் இடத்தால் வரும் பெயர்கள் - மதுரையான், அகத்தான் காலத்தால் வரும் பெயர்கள் - ஆதிரையான், ஓணத்தான் சினையால் வரும் பெயர்கள் - செவிடன், குருடி, குருடு குணத்தால் வரும் பெயர்கள் - பெரியன், நெடியர், நெட்டை தொழிலால் வரும் பெயர்கள் - உழவன், இரவலன் சுட்டால் வரும் பெயர்கள் - அவன், இவன் வினாவால் வரும் பெயர்கள் - எவன், யாது உவமையால் வரும் பெயர்கள் - பொன் அன்னான், பொன் அன்னது. மகன், அரசன் முதலியன னகர ஈற்று உயர்திணைப் பெயர்கள். மகள், இல்லாள் முதலியன ளகர ஈற்று உயர்திணைப் பெயர்கள். நங்கை, தந்தை முதலியன ஐகார ஈற்று உயர்திணைப் பெயர்கள். |