மகளிர், கேளிர் முதலியன இர் ஈற்று உயர்திணைப் பெயர்கள். முனிகள், தம்பிகள் முதலியன கள் ஈற்று உயர்திணைப் பெயர்கள். அது, இது முதலியன துகர ஈற்று அஃறிணைப் பெயர்கள். குண்டுகட்டு முதலியன டுகர ஈற்று அஃறிணைப் பெயர்கள். அவை, இவை முதலியன வைகார ஈற்று அஃறிணைப் பெயர்கள். பல, சில முதலியன அகர ஈற்று அஃறிணைப் பெயர்கள். மாடுகள், பூக்கள் முதலியன கள்ளீற்று அஃறிணைப் பெயர்கள். நம்பி, ஆடூஉ, மாந்தர் போன்றவற்றில் வரும் இ, உ, அர் முதலிய ஈறுகளும் உயர்திணைக்குரியன. மரம், பாம்பு, பலா, அலவன் போன்றவற்றில் வரும் பல ஈறுகளும் அஃறிணைப் பெயர்க்குரியன. முதற்பெயர்கள் : சாத்தன், கோதை முதலியன. சினைப்பெயர்கள் : முடவன், முடத்தி முதலியன. சினைமுதற் பெயர்கள் : முடக்கொற்றன், கொடும்புற மருதி முதலியன. முறைப் பெயர்கள் : தந்தை, தாய், முதலியன. தன்மைப் பெயர்கள் : யான், யாம், நான், நாம். முன்னிலைப் பெயர்கள் : நீ, நீர், நீயிர், நீவிர், நீங்கள் இச்சூத்திரம் நேமிநாதம் 30, நன்னூல் 282 ஆகிய இரண்டையும் தழுவியது. நேமிநாதத்தின் ‘சுட்டேவினா ஒப்பே பண்பே தொகு ன,ள,ர, ஒட்டுப்பேர் எண்ணியற்பேர் ஒண்ணிலப்பேர் இட்டிடையாய் கூடியற்பேர் காலம்குலம் தொழிலின்பேர்.’ (30-1-3) என்ற வரிகளையொட்டிச் சுவாமிநாதம் அமைந்துள்ளது. |