குரவை, புலவி தொடங்கிச் சிறுகாப்பியம்போல உரைநடையும் பிறமொழியும் கலந்து பாடப்படுவன. அடுத்துப்பொருத்தம் பற்றிப் பேசப்படும். பாட விளக்கம் : ‘பஞ்சரத்தின்’ (2வது வரி) என்று மூலபாடத்தில் இருப்பதை 166-இல் ‘பஞ்சரத்தினம்’ என்று ஒருவகைப் பிரபந்தம் கூறியிருப்பதால் ‘பஞ்சரத்தினம்’ என்று திருத்திக்கொள்ளப்பட்டுள்ளது. 173. | மங்கலஞ்சொல், எழுத்துத்,தா னம்,பாலோடு, உண்டி, வருண,நாட்,கதி, கணம்,பத்தாம் செய்யுட்பொ ருத்தம் கங்கை,பரி, உலகஞ்சீர் பருதி,சசி,தார்கார், கடல்,புகழ்மா மலை,திருநீ ரெழுத்து,அமுதம் பழனம் சங்கம்,அணி, பார்தேர்சொல், தாமரை,பொன் னாணை, சந்தனங்,கற் பகம், நிதி,பா லழகு,அன்னம், திகரி, திங்கள், பூ நாளும் முதன் மொழிக்காம்,நல் லடையுந் திரிசொலுமாம் நூற்குஇசைமுன் பின்இடைமங் கலமே. [12] | பொருத்தத்தின் வகையும் ‘மங்கலம்’ ஒன்பதன் விளக்கமும் உணர்த்துகின்றது. உரை : 1) மங்கலம், 2) சொல், 3) எழுத்து, 4) தானம், 5) பால், 6) உண்டி (உணவு), 7) வருணம், 8) நாள், 9) கதி, 10) கணம் என்று பொருத்தம் பத்துவகைப்படும். அவற்றுள் மங்கலப்பொருத்தம் என்பது கங்கை, பரி, உலகம், சீர், பருதி, சசி, தார், கார், கடல், மலை, திரு, நீர், எழுத்து, அமுதம், பழனம், சங்கம், அணி, பார், தேர், சொல், தாமரை, பொன், ஆணை, சந்தனம், கற்பகம், நிதி, பால், அழகு, அன்னம், திகரி, திங்கள், பூ, நாள் ஆகியவை முதன்மொழிகள் வருமாறு பாடுவது. நல்ல அடைச்சொற்களும் திரிசொற்களும் நூலுக்கு முன்னும் பின்னும் இடையிலும் பயன்படுத்துவது மங்கலம் ஆகும். |