விளக்கம் : நன்னூல் 3-ஆம் சூத்திரம் பொதுப்பாயிரம் நூல், நுவல்வோன், நுவலுந்திறன், கொள்வோன், கோடல், கூற்று ஆகிய ஐந்து என்று கூறும். ஆனால் தொல்காப்பிய உரைகளாகிய இளம்பூரணம், நச்சினார்க்கினியம், இலக்கண விளக்கம் ஆகியவற்றைத் தழுவிப் பொதுப்பாயிரம் நான்கு கூறு உடையது என்று கூறியுள்ளார். 5. |
மெய்தவிருங் கழற்குடம்போல் முறையன்றிப் பிறழ்தல் மிகும்முடத்தெங் காய்முயன்றோர்க்கு அன்றி அல்லோர்க் கீதல் செய்பருத்திக் குண்டிகைபோற் கோளல்கொடை முட்டுறுதல் செறியுமடற் பனையெனத்தா னேகொடுத்தால் அன்றி எய்து அடுத்தோர்க்கு ஈயாமை உடைத்தாகி யெவைக்கும் இச்சித்தல் அழுக்காறு மனவஞ்சங் கொடுமை யையுறல்வீண் படிப்போதன்ற குருவுக்குள தாமக்குணங்கள் இன்மையுமே உள்ளவன் துற்குருவே. | |
(4) | | தீய ஆசிரியனின் இலக்கணம் கூறுகின்றது. உரை : கழற்காய் போட்ட குடத்தினது குணம் போல முறை இல்லாத முறையில் மாறுபட்டுக் கூறுதல்; தென்னை மரம், தனக்கு உதவி செய்தவர்களுக்கு உதவாமல் பிறர்க்கு உதவுதல் போலத் தன்னை வழிபடுவோர்க்குச் சொல்லித் தராமல் பிறர்க்குச் சொல்லித் தருதல்; பருத்திக் குண்டிகை போன்று சிறிது சிறிதாகக் கொடுத்தல்; பனைமரம் போன்று தானே கொடுத்தால் தவிரத் தன்னிடத்து வந்து நெருங்கி வருவோர்க்குக் கொடுக்காமை; பொருள் உடையவனாக இருந்தாலும் எல்லாப் பொருளையும் விரும்புதல்; அழுக்காறு, வஞ்சமனம், கொடுமை, ஐயப்படுதல், வீண்படிப்பு, ஆசிரியனுக்கு வேண்டிய நற்குணங்கள் இல்லாமை ஆகிய குணங்களை உடையவன் தீய ஆசிரியன் ஆவான். |