பக்கம் எண் :

102மாறனலங்காரம்

கொண்டுவந்த எம்முடைய பிரான் சங்கையு மாழியையுங் கைகளிலேந்தினான் எவ்வுளார்க்குந் தம்பிரான்; அவனது திருவடிகளே சரணாமென்றவாறு.

கொன் - பயனில்சொல். இது கௌடவலி; என்னை? இதனுளிருதிறப் பண்புத்தொகை முதலாகத் தொகையாறு முடைமைவினைக் குறிப்பும் பிறசொற்றொகைகளு மிகவருதலா னெனக்கொள்க. துறை- கடவுள் வணக்கம்.

பொற்றொடிவேற்கண்கள்புடைசிறந்தாட்கெஞ்ஞான்று
முற்றவுடலுயிரீங்கொன்றென்றே--சொற்றனவாற்
றோடலர்தார்மாறன் றுடரியினெஞ்சேயிவளைக்
கூடலெளிதென்றேகுறி.
(108)

என்பது பாஞ்சாலவலி. என்னை? பொற்றொடியெனவே வேற்றுமைத் தொகைப்புறத்துவந்த அன்மொழித்தொகையும், வேற்கண்ணெனவே யுவமைத்தொகையும், புடைசிறந்தாட்கெனவே வேற்றுமைத்தொகையும், உடலுயிரெனவே யும்மைத்தொகையும், தோடலர்தாரெனவே வினைத்தொகையும் வந்து பண்புத்தொகையொன்றுமே வராது, பெயர் வினைச்சொற்களு முளவாய், முன்னவைபோலச் சுருங்காது மிகாது மிடைநிலைப் பட்டமையா னென்றுணர்க. பகுதி - பாங்கியிற்கூட்டம். துறை - பாங்கியையறிதல். வலி முற்றும்.

ஆவிக்குறுதுணைப்பெண்ணாரமுதைப்போலுரைத்த
நாவிற்கினிமைநயப்பதோ--மூவுலகுந்
தாய்க்கொண்டதாளரங்கர்தண்ணளிசார்விண்ணவர்தாம்
வாய்க்கொண்டுயிர்வாழ்மருந்து.
(109)

என்பது, எனதாவி வாழ்வதற்கு மிக்கநற்றுணையாகிய விப்பெண்ணாகிய அமிர்தினைப்போற் றன்பெயரினைச் சொன்னாற் சொன்ன நாவிற்கு மினிமையை யளிப்பதொன்றாமோ? பூமி முதலாய மூன்றுலகங்களையுந் தாண்டியளந்துகொண்ட தாளினையுடைய திருவரங்கேசர்கருணையைப் பொருந்தின வானிலுள்ளார் வாயாலுண் டினிமையைக்கொண் டுயிர் வாழாநின்ற அமிர்தமென்றவாறு.

ஓகாரம் ஒழியிசை. இதனுள், பெண்ணாகிய அமிர்தினுயர்த்தி யுலகொழுக்கிறவாமை யுயர்த்தினமையால் இது வைதருப்ப காந்தம். பகுதி - இடந்தலை. துறை - நலம்புனைந்துரைத்தல்.