சூத்திரத்துள் வருமிலக்கணத்திற்கு வந்ததனைக்கூட்டி முடித்தலுமாம். அவையாவன : “கூறியவுறுப்பிற் சிலகுறைந்தியலினும், வேறுபாடின்றென விளம்பினர்புலவர்” எனவும், “அறமுதனான்கினுங் குறைபாடுடையது, காப்பியமென்று கருதப்படுமே” எனவும் பொதுவியலுட் கூறிய சூத்திரங்களானுணர்க. என்னை? அறமுதனான்கினுங் குறைபாடுடையது காப்பியமெனவே, பின்னர்க்கூறிய சூத்திரத்தினுள் வந்தது கொண்டு அறமுதனான்கு மொழித் தல்லா தவுறுப்பிற் குறைவதே பெருங்காப்பியமென்று முடித்தலானுங், கூறியவுறுப்பிற் சில குறைந்தியலினு மெனவே முன்னர்க் கூறிய சூத்திரத்தினுள் வாராத அறமுதனான்கின் ஒன்றும் பலவுங் குறைபாடுடையது முறுப்பிற் சில குறைதலுங் காப்பியமென்று வாராததனைக் கொண்டு வந்ததனோடு முடித்தலானுமென அடைவே கண்டுகொள்க. இவை தம்மிற்றாமாறாடினுமிழுக்காது. பிறன்கோட்கூறலென்பது பிறநூலாசிரியன் கொண்ட கோட்பாட்டைக் கூறுதல். அஃதாவது “வேற்றுமைதானேயேழெனமொழிப” என்றல். எனவே, தன் கோட்பாடன்றென்பதாயிற்று. தன்கோட்கூறலென்பது பிற நூலாசிரியன் கூறியவாறு கூறாது தன் கோட்பாட்டாற் கூறுதல். அஃதாவது “விளிகொள்வதன்கண் விளியோடெட்டே” என்றல். பிறனுடம்பட்டது தானுடம்படுத லென்பது பிறநூலாசிரிய னுடம்பட்டதற்குத் தானுமுடம்படல். அஃதாவது இரண்டாம் வேற்றுமை செயப்படுபொருட்கண் வருமென்றார் பாணினியா ரஃதிவர்க்கு முடம்பாடு என்றல். அஃது இயற்றப்படுவதும் வேறுபடுக்கப்படுவதும் எய்தப்படுவதுமாம். அதற்குதாரணம் - எயிலையிழைத்தான், மறத்தைக் குறைத்தான், நூலைக் கற்கும் என அடைவேகாண்க. அறியாதுடம்படல் என்பது தானறியாதவற்றைப் பிற பெரியோர் கூறியவாற்றானுடம்படல். அஃதாவது ஏழாநரக மித்தன்மைத்தெனச் சான்றோர் கூறியவழித் தனக்கது புலப்படாததாயினுந் தானதற்குடம் படல். இது வழி நூலாசிரியர்க்குமுரித்து. |