வெளிப்படையாகவுஞ் செம்மொழியாக விரட்டுறமொழிதலாலும், அதனாலாய பயன்யாதென அக்காலத் திம்மூப்பு நீங்குமென அத்தச்சிலேடையாகவுங் கொள்ளக்கிடந்தமையாலு மெனக் கொள்க. ஒன்றினமுடித்த லென்பது ஒன்றற்கிலக்கணங்கூறியவிடத்துக் கூறாது தொக்குநின்ற ஒழிபிற்கு மதுதானே விதியாகமுடித்தல். அஃதாவது “புள்ளியீற்றுமுன்னுயிர் தனித்தியலாது, மெய்யொடுஞ் சிவணுமவ்வியல் கெடுத்தே” என்னும் சூத்திரத்தானுணர்க. என்னை? இயல்பல்லாத புள்ளிமுன் னுயிர்வந்தாலும் அவ்விதி கொள்கவென முடித்தல் உதாரணம் :- ஆலடை, ஆலாடை எனவும், அதனை எனவும், நாடுரி எனவும் வரும். தன்னினமுடித்த லென்பது ஒருவகையுட்சிலவற்றிற் கிலக்கணங் கூறியவிடத்துச் சொல்லாதொழிந்தனவாய்த் தொக்கதற்கும் ஆட்சியுங் காரணமும்பற்றி யச்சூத்திரத்தினிடத் ததற்கும் வேறோரிலக்கணங் கூறிமுடித்தல். அஃதாவது “அ இ உ அம்மூன்றுஞ்சுட்டு” என்னுஞ் சூத்திரத்தானுணர்க. என்னை? குற்றெழுத்தென்றவற்றுண் மூன்றனைச் சுட்டென்னுங் குறியவென்று கூறியவிடத்து எகரமும் வினாப்பொருளு ணர்த்துமென முடித்தல். மாட்டுறுப்பினவாமனக்கொளக் கூறலென்பது ஒரு சூத்திரத்துப் பொருள்கொள்ளுங்கா லகன்று பொருள்கிடப்பனவும், அணுகிக்கிடப் பனவுமான விருவகையையும் பொருண்முடியுமாற்றாற் கொணர்ந்துரைப்பச் செய்தல். என்னை? “அகன்று பொருள்கிடப்பினும்... மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின்” என்றாராகலின். மனக்கொளவென்பது கேட்டோர் மனத்துட் கொளவென்பதாம். இதற்குச் சூத்திரம் “வடவேங்கடந்தென்குமரி............... படிமையோனே” என்பதெனக்கொள்க. அதற் கிளம்பூரணருரையன்றி நச்சினார்க்கினிய ரெழுதின வுரையைக் கண்டுகொள்க. அவற்றை யீண்டுரைப்பிற் பெருகும். உய்த்துக்கொண்டுணர்த லென்பது ஒரு சூத்திரத்தானொன்றற் கிலக்கணங்கூறியவழி யதற்குப் பொருந்தாமையுளதாகத் தோன்றின் அதனையு மதற்குப் பொருந்தினவழியாகக் கூட்டுதல். அஃதாவது
|