குளம்பினொடுங்கூடிய ஆவினது கூட்டத்தைவளர்ப்பான், திருமூழிக்கள மென்னுந் திருப்பதியையுமுடையான் றீயமக்களுக் கொளிக்குங் கள்ளத்தையுடையனா மென்றவாறு. எனவே, நன்மக்களை வெளிவந்து காப்பானென்பது பயன். துறை - கடவுள்வாழ்த்து. பணியும்பணியும்பனிமாமதியா மணியுமணியுமரற்கும்--பிணிசெய் தலைதலைதீர்த்தான்சரணமல்லாதேதம்ப மிலையிலைத்தாரீந்துபுலவீர் | (639) |
இது நாலடியும் முதன்முற்றுமடக்கு. (இ-ள்) புலவிர்காள் ! பாம்பையுங் குளிர்ந்த பெரியமதியாய் மேலாக்கஞ்செய்யு மாலையையுஞ் சடைமேற்புனைந்த சிவனாகிய பெரியோனுக்குந் துன்பத்தைச்செய் தறிவைநடுங்குவித்த பிரமசிரமானதைக் கையைவிட்டு நீங்குவித்தானாகிய ஸ்ரீமந் நாராயணன்றிருவடிகளல்லாதே, அந்தியகாலத் தறிவுநிலைகலங்கிச்சாய்ந்து பிறவியாகியகுழியிலே நீர் விழும்பொழுது வீழாதே நும்மைத் தாங்குந்தூண் வேறில்லையாதலா லவன்றிருவடிகளிற் றுளபமாலிகையைச்சூட்டி வணங்குவீராக வென்றவாறு. அரற்கு மென்னு மும்மை சிறப்பும்மை. இலைத்தார் - இலைமாலை யாதலால், துளவமாலிகையென்றாயிற்று. புலவீர் பணியு மெனக்கூட்டுக. திணை - பாடாண். துறை - ஓம்படை ; கடவுள்வாழ்த்துமாம். இவை பதினைந்தும் அடிமுதன்மடக்கு. இனி இடைமடக்கு வருமாறு :- கயிலாயம்பொன்னுலகம்புரந்தரனும்புரந்தரனுங் களிக்கமேனா ளெயிலார்தென்னிலங்கையர்கோன்பஃறலைக்கோர்கணைவழங்கு மிந்தளூரான் மயிலாய்மைவரையணங்கேநினதுயிராமேவல்புரி மயிலைக்காவல் பயிலாயத்தெழுந்தருளித்துணைவிழியாலுணர்த்தியருள் பாரிப்பாயே. | (640) |
இது முதலடியிடைமடக்கு. (இ-ள்) கயிலாயம் பொன்னுலகம் புரந்தரனும் புரந்தரனுங் களிக்க என்பது வெள்ளிமலையையுந் துறக்கத்தையுந் தமதாகப்புரந்து அரனும் |