அலகிலென்பது “குற்றியலுகரமுமற்றெனமொழிப” என்பதனால் நிலைமொழியீற்றுக் குற்றியலுகரம் புள்ளியீறுபோல வருமொழிமுத லிகரவுயிரேற இடங்கொடுத்தது. இம்மாட்டேற் றொருபுடைச்சேற லென்றுணர்க. அன்றிக் குற்றியலுகர மழிந்ததெனிற் பொருள் வேறுபடும். அஃதுரையன்றென்க. இது குறைவுங் கூட்டமு முடனொன்றியது. கருவி-அகக்கருவி. என்னை? நிலைமொழியீற்றுகரம் வருமொழிமுத லிகரமேற இடங்கொடுத்தலா லென்றுணர்க. அலகில்சோதியென்பது “அல்வழியெல்லாமுறழெனமொழிப” என்றாராகலின் லகாரம் அல்வழிக்கண் வல்லினம்வர வியல்பாயது. சோதியணி யென்பது “இ ஈ ஐ வழியவ்வு” மென்பதனால் யகர வுடம்படுமெய் பெற்றது. இது புறப்புறச் செய்கை. அணிகிள ரென்பது “அல்வழி இ ஐ முன்னராயி, னியல்பு மிகலும் விகற்பமுமாகும்” என்பதனால் இகரவீற்று வருமொழி முதல் வல்லினம் அல்வழிக்கண் ணியல்பாயது. கிளர்திரு வென்பது “ஆவியரழவிறுதிமுன்னிலைவினை, யேவன் முன்வல்லினமியல்” பென்பதனால் வினைத்தொகைவாய்பாடு மேவல் வினைபோறலின் அல்வழிக்கண் ரகாரமுன் வல்லின மியல்பாயது. திருவுரு வென்பது “ஏனையுயிர்வழிவவ்வு” மென்பதனால் வகர வுடம்படுமெய் பெற்றது. செய்கை - இதுவும் புறப்புறச்செய்கை. இனி உலகம் என்பது பலபொருள்குறித்த ஒருசொல்லாயினு மீண்டுச் சிறப்புடையுயிர்கண்மே னின்றது. உலகம் யாவையு மென்பது “பெயரினாகியதொகையுமாருளவே” என்பதனாலும், “காலமுலகமுயிரேயுடம்பே,... பால்பிரிந்திசையா வுயர்திணைமேன” என்பதனாலும் ஆபல என்பதுபோலப் பிறிதோர்பயனோக்காது உயிர்களோ டமைந்து ஆகிய வென்னும் பண்புத்தொகைவாய் பாட்டோடும் எல்லாமென்னு மஃறிணைப் பன்மைமுற்றுப் பெயர்ப் பயனிலைக் கொண்டது. யாவையு மென்னும் பயனிலை தானே யெழுவா யுருபாகி மிகுந்த வென்னும் வினைத்தொகை முதனிலையாய்த் தன்னெச்சமான வூதியமென்னும் பெயரோடும் வினையெச்சவாய்பா டேற்றது.
|