கைதொழக் குடிபுகுந்துநின்ற தென்ன அகடிதகெடித சாமர்த்திய குணமோ வெனவு மீரிடத்துங் குறிப்பெஞ்சிநின்றதெனக் கொள்க. மெய்ப்பாடு - மருட்கையைச் சார்ந்த பெருமிதம். இவ் வுரைநடையுட் பொழிப்புரை தலைதடுமாறியும், பொழிப் பகல நுட்ப மெச்ச மென்னும் நால்வகையுரை நடையும் நிகழ்ந்தமையுங் காண்க. தெண்டிரை....... ஆயிடை என்பது தெளிந்த திரையார வாரிக்குந் தெற்கின்கட் குமரியும் எல்லையாகவுடையதென்று கூறப்படுவனவாம் அவற்றி னடுவிருந்து என்றவாறு ஆயிடை என்பது “நீடவருதல்செய்யுளுளுரித்தே” என்பதனாலும், “சுட்டு, நீளின்யகரமுந் தோன்றுதனெறியே” என்பதனாலும் யகரவுடம்படுமெய் தோன்றியது. அமிழ்தினும்......... மதிக்கும் என்பது தேவர்பானமாகிய வமிர்தினும் பெருத்தசுவையுடைத்தாம் எழுத்துச் சொற்பொருளென மூன்றுதன்மைத்தாகிய தமிழை யாராயாநிற்கும் அறிவின்றன்மையையுடைய பெரியார் நன்குமதிக்கும் என்றவாறு. முதுமொழித்தெண்டி......... புணர்த்தியலணியையும் என்பது முந்துநூல்களையாராயுந் தெண்டியாசிரியர் கூறப்பட்ட முதனூலணிகளோடுந் தினமு நவமான பாடலேபாடும் புலவராற்கூறப்பட்டனவா யுலகின்கண்ணே வழங்குவனவா மணிகள் பலவற்றையும் என்றவாறு. தனாது நுண்ணுணர்........ விரித்தும் என்பது தனது நுண்ணிய வறிவுகாரணமாகக் கண்டளித்த பலவணிகளையுங் கற்றோர் மனத்துட்கொள்ளத் தொகுத்தும், தொகுத்ததனை வகுத்தும், வகுத்தவற்றை விரித்தும் என்பதாம். தனாது, மனாது என்பன “ஆறனொருமைக்கதுவு மாதுவும்” என்பதனால் அதுவென்னு மாறனுருபு ஒருமையிடத்து ஆது ஆயிற்று. பொதுவியல்......... எச்சவியலென வென்பது பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல், எச்சவியலென்று கூறும் படிக்கு என்றவாறு. இவற்றுள், இயல் என்பதனை நான்கினுங்கூட்டி அணி என்பதனைப் பொருண்முத லிரண்டினுங் கூட்டியுரைக்க. |