பொருட்டொடர் நவம்புணர் புலமையோன் என்பது பெருங்காப்பியம் புதிதாகப் பாடல்சான்ற அறிவின்றன்மையையுடையோன் என்றவாறு. ஏகார மீற்றசை. வடக்கின்கண் வேங்கடமுந் தெற்கின்கட் குமரியுமென்னக் கூறப்படுவனவா மவற்றினடுவிருந்து தமிழை யாராயு முணர்வுடையோர் நன்குமதிக்குந் தெண்டிமுதனூலணியொடும் புலவர் புணர்த்துவழங்கு மணியையுந் தனது நுண்ணுணர்வாற் கண்டளித்த பலவணியையுங் கற்றோர்மனத்துட்கொளத் தொகுத்தும் வகுத்தும் விரித்தும் நால்வகை யியலா னீரிடம்பொருந்தின சார்பு நூலென்பதாகவும், அந்நூற்குக் காரி யார் பெற்றருள் கலைக்கடலியற்பெயரை யணியாகப் புனைந் தாரியர்குழீஇய வவையின்கண் ணரங்கேற்றினன் ; அவன் யாரெனிற் சிற்குணச் சீனிவாதனின்னருளால் நற்பொருண் மூன்றையு மாராய்வோன் திருக்குருகைப் பெருமாள்கவிராயன் சடையன் பொருட்டொடர்நவம்புணர் புலமையோ னென்க. அஃதாக முன்னர்ச் சிறப்புப்பாயிரம் பதினொருவகைப்படுமெனக் கூறிய வப்பதினொன்றும் இப்பாயிரத்துட்பெற்றவா றெங்ஙனேயோ வெனின்? வடவேங்கடந் தென்குமரியெனவே எல்லையும், முதனூலணியொடு மெனவே வழியும் நுதலிய பொருளும், தனாது நுண்ணுணர்வாற்றருபல வணியையு மெனவே காரணமும், பயனும், பொதுவியல் பொருள்சொல் லணியெச்ச வியலென வெனவே யாப்பும், காரிபெற்றருள் கலைக்கடலியற்பெயர்புனைந் தெனவே நூற்பெயரும், ஆரியர் அணிற வவைக்களத்துரைத்தன னெனவே கேட்டோரும், களனும் திருக்குருகைப்பெருமாள்கவிராயன் சடையனெனவே நூல்செய்தோன்பெயரும், காலமும் ஆகப் பதினொன்றும் இப்பாயிரத்துள்ளே பெற்றவாறு காண்க. அன்றியும், நூல்செய்தோன் வழிபடுதெய்வமும் தெய்வத்து ளிதுவே பரத்துவமென்ன வறிவித்த ஞானாசிரியனும், நூல்செய்தோன் பிதாவும், குலனும், பதியும் கூட்டிப் பதினாறென்னுமவையும் இப்பாயிரத்துட் பெற்றவாறு காண்க. இஃ திருபத்தாறடியான் வந்த நேரிசையாசிரியப்பா. என்னை? “ஈற்றயலடியேயாசிரியமருங்கிற், றோற்றமுச்சீர்த்தாகுமென்ப” என்றாராக |