பக்கம் எண் :

16 முக்கூடற் பள்ளு

(இ - ள்.) சிவந்த கால்களில் அழகாகப் பூசப்பட்ட கொச்சி மஞ்சளும், அவள் அணிந்திருக்கும் பூம்பச்சை இலையும் எங்கும் மணம் வீச, சிறிய நெற்றியாகிய பிறை நிலாவிலிட்ட திருவெண்ணீற்றுக் குறி ஒளி வீச, மை தோய்ந்த இரண்டு கண் விழிகளும் பஞ்சலைக் கெண்டைகளைப்போலப் பிறழ்ந்து பக்கத்துக் கொண்டையிலும் குண்டலங்களிலும் ஒளி தைக்கும்படி குதிக்க, நெஞ்சைக் கவரக்கூடிய பருத்த கொங்கைகளாகிய மிகுந்த மதமுள்ள யானையின் இணைந்த கோடுகள் அசைய, நீலக்கல் வடத்துடன் கோவையாகக் கோத்த தாலியும் விளங்கித்தோன்ற வஞ்சிக்கொடி போன்ற இடையில் அணிந்த பட்டும் அதினுள்ள ஐந்துவகை வண்ணத்தின் அழகும் இலங்க, மருதூருக்குச் சிறப்பாய் வாய்த்த இளைய பள்ளி அரங்கத்தில் தோன்றினாள்: (எ-று. )

(வி - ம். ) படம் என்பதற்குப் படங்கால் என்றும், ஓவியம் என்றும் வேறு பொருள்களுங் கொள்ளலாம்.

பச்சை என்பது இலையே யன்றிப் பூவண்ணமாகக் குத்திய பச்சையையும் குறிக்கும். மஞ்சளும், பச்சையும் கலந்து விளங்க என்று பொருள்கொள்க. ‘வஞ்சி மருங்கணி பூம்பட்டும்’ என்பதும் பாடம்.

(8)

கொச்சகக் கலிப்பா

9. ஆதிமரு தீசருக்கும் ஆட்பட் டழகருக்கும்
பாதியடி மைப்படுமோ பள்ளிமரு தூரிளையாள்
சோதிமுக மள்ளருக்கே தோன்ற வயலுற்றுநட்ட
போதிலொரு பூவில்ஐந்து பூவும் பயிராமே.

(இ - ள்.) முதல்வராகிய மருதீசருக்கும் அடிமைப்பட்டுப் பின்பு முக்கூடலழகராகிய திருமாலுக்கும் பாதி அடிமைப்படுவாளா அந்த மருதூர் இளைய பள்ளி? தன் ஒளி பொருந்திய முகம் மள்ளருக்குத் தோன்றும்படியாக இளைய பள்ளி வயலையடைந்து நடுகை நட்டபோது, ஒரு பூவிலேயே ஐந்து பூவிற்கும் சேர்த்துப் பயிர் உண்டாகும்; (எ-று. )