காட்டலின் ஈவோன் தன்மையும் இவ்வாறாம் எனப் பருப்பொருட்டாக அதனை உணர்த்துதல் உடைத்து. நிலன், உழவர் வித்திட்டபின் முளையும் நாற்றும் பீளும் கதிரும் நெல்லும் பிறவும் ஒன்றன்பின் ஒன்றாகக் காரணகாரிய முறையானே காட்டலின், ஈதல் இயல்பும் இவ்வாறாமென அதனை உணர்த்தல் உடைத்து. பூ, தன்னைப் பெற்று வளர்த்துத் தாங்கி ஆதரித்துச் சொல்லற்கு அரிய பெருநன்றி செய்த முதல் பொருளாகிய கொடி முதலாயவற்றுக்கும், தன்னோடு வேற்றுமை இன்றிப் பின்னிப் பழகிய ஏனைய கொடி முதலாயவற்றுக்கும், தேன் உண்ணும் இயல்பின்மையான் அந்நன்றியும் நட்பும் காரணமாகத் தேன் அளியாமல், தனக்கு ஒரு நன்றியும் செய்யாமலும் முன்னர்ப் பரிசயம் ஒன்றும் இல்லாமலும் புதிதாகச் சேணின்று தன்னை அடைந்த தும்பிக்கு உண்ணும் இயல்பு இருத்தலின் அதுபற்றி அதனை அளித்தலின், கொள்வோன் தன்மையும் இவ்வாறாமென அதனை உணர்த்தல் உடைத்து. துலாக்கோல், தன்மருங்கு உள்ள பொருளை ஒருவன் பெறுதற்கு எண்ணில் தானிருக்கும் இடத்து அவன் வந்து, வேண்டும் பொருள் இதுவெனச் சொல்லி, அப்பொருட்கு உரிய விலை சாட்டி, தன்னுடன்பாடு பெற்றபின்னர் அப்பொருளை அவன் பெறுமாறு கொடுத்தலின், கோடல் மரபும் இவ்வாறாமென அதனை உணர்த்தல் உடைத்து. இவ்வாற்றான் ஆசிரியன் பொதுப்பாயிரத் தன்மை உரைக்குமாறு பெறப்பட்டது. அக்குடம், சிறார் தன்னை அடைதற்கு முன்னர்த் தான் ஒன்றும் இன்று எனக் காட்டல் உடைத்து. அப்பனை, தான் அளிக்கும் கள்ளினைக் காரணகாரிய முறையால் காட்டலின்று. அத்தெங்கு, உண்ணும் இயல்புடையார்க்கு உண்ணத்தகாப் பொருளாகிய ஓலையினையும் உண்ணும் இயல்பில்லாத தன் பராரைக்குத் தான் பெற்ற உண்ணும் இயல்புடைய மழைநீரையும் அளித்தல் உடைத்து. அப்பருத்தி, தனக்குள் இருக்கும் பொருளைத் தன் உடன்பாடு பெறாமல் கொள்ளக் கொடுக்கும் இயல்புடைத்து. இவ்வாற்றான் அல்லாதான் பருப்பொருளும் அறியானாகலின் பாயிரம் கூறுமிடத்தும் பிறழ உரைப்பன் என்பது பெறப்பட்டது. |