பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்115

எனவும் கூறினார் ஆகலின் அம்முனைவனால் காணப்பட்டதாய்த் தனக்கு ஒரு காரணம் இன்றித் தானே பிறநூற்குக் காரணமாகிய நூலாம். அதனால் அது தனக்கு ஒரு முதல் நூலையும் இணை நூலையும் இன்றித் தனக்குத் தானே இணையாய நூல் எனப்படும். அது, வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் ஆதியில் கண்டனவாகிய மாகேச்சுர சூத்திரமும் வேதாகமங்களும் முதலாய ஆரிய முதல் நூல்களும், இசை நுணுக்கமும் களவியலும் முதலாய தமிழ் முதல் நூல்களும் போல்வது.

இனி ஆதியில் முனைவன் தமருகத்தினின்று பதினான்கு ஒலி தோன்றின. அவ் ஒலியே மாகேச்சுர சூத்திரம் எனப்படும். அவற்றுள் முதல் ஒலி, அ இ உ ணு, என்பது. ஏனையவும் அதுபோல்வன. அப்பதினான்கு சூத்திரத்தையும் முதல் நூலாகக் கொண்டு பிருகற்பதி ஒரு நூல் செய்தான். அதன்வழித்தாக இந்திரன் ஐந்திரம் எனும் பெயரிய நூல் செய்தான். இவ்வாறே பின்னும் சில தோன்றின. அவை எல்லாம் கலியுக ஆரம்பத்து அழியவே, அம்முனைவன் அருள் பெற்று அம்மாகேச்சுர சூத்திரத்தின் வழித்தாக இற்றைக்கு நாலாயிரத்து ஆண்டின் முன்பு காசுமிர தேயத்தரசன் காநிட்கன் காலத்தில் பாணினி தன் பெயரான் ஒரு நூல் செய்து அரங்கேற்றினன். அதுவே இக்காலத்துள்ள ஆரிய வியாகரணம். அதற்கு வரருசியும் பதஞ்சலியும் உரை செய்தனர். பதஞ்சலி உரைக்குப் பாடியம் எனப் பெயர். பாடியம் செய்த ஆசிரியனும் வியாக்கிரபாத முனிவனோடு ஒருங்கு எண்ணப்படும் பதஞ்சலியும் வேறாவர்.

இனி, முனைவன் தமருகத்தினின்று ஆரியத்திற்கு முதல் நூலாக மாகேச்சுர சூத்திரம் தோன்றினாற்போல அக்காலத்தில் தானே அவனது வாயினின்று தமிழிற்கு முதல் நூலாக முப்பத்துமூன்று சொற்கள் தோன்றின. அவை நான்கு சூத்திரமாகப் பகுக்கப்பட்டன. அவை நுணுகி ஆராய்ந்தவழி இயல் இசை நாடகம் எனும் முத்தமிழ் இலக்கணமும் முப்பொருளும் முற்றத் தோன்றும் இயல்பின ஆதலின் அச்சூத்திரங்கட்கு இசைநுணுக்கம் எனப் பெயர் வழங்கிற்று. ‘இசை’ என்பது சொல். அதுவே தமிழிற்கு இயற்கை முதல் நூல் எனப்படும். அந்நூலின்கண் உள்ள நான்கு சூத்திரங்களுள் முதல் சூத்திரத்திற்கு, மெய்யறிவினராகிய அகத்தியன் முதலாயினார் உள்ளத்தின் விளங்கு முனைவனே ஒன்றும் அறியாக் கடையா யாருள்ளும் இறப்பக் கடைப்பட்டேனாகிய என் உள்ளத்தும் கோயில்கொண்டு எழுந்தருளி வீற்றிருப்பான் என்பது தொன்மறைத்