துணிவு ஆதலின் அவன் என் உள்ளத்துநின்று உணர்த்திய அளவின் இயற்றமிழ்ப் பகுதியுள் பெரும்பாலன விளங்குமாறு ஓர் உரை எழுதி இசைநுணுக்கச் சிற்றுரை எனப் பெயர் தந்தேன். தவம் முற்ற உடைய ஆசிரியன் அகத்தியன் முதலாயினார்க்கு அன்றி, அவம் முற்ற உடைய கடையேற்கும் முற்ற உணர்த்த அம்முனைவற்கும் அருமையின், யான் இசைநுணுக்கத்து அறிந்த பொருள் கடலுள் அலை எறிந்த நீர்த்துளிபோலும் ஆகலான் சிற்றுரை எனப்பட்டது. அவ்வுரை இனம் பற்றி இயற்றமிழ் கூறும் இந்நூலுரையுடன் இறுதியில் சேர்க்கப்படும். இசை நுணுக்கம் என்னும் பெயரால் முத்தமிழுள் இசைத்தமிழே கூறுவதாகிய நூலும் ஒன்று உண்டு. அது சிகண்டி ஆசிரியனால் சாரகுமாரன் பொருட்டுச்செய்த இடைச்சங்கத்து வழி நூல். இனிச் செயற்கை முதல்நூலாவது, தானே தலைவனாகிய அம்முனைவனை வழிபட்டுத் தலைவராயினார் அவன் அருளால் அவன் கண்ட இயற்கை முதல்நூலின் வழித்தாகப் பிண்டம் படலம் ஒத்து சூத்திரம் எனச் செயற்கை நலம் தோன்றச் செய்த நூலாம். அத்தலைவர் அமரமுனிவரராகிய அகத்தியனும் நாரதனும் ஏனைய முனிவரராகிய மார்க்கண்டேயனும் வான்மீகியும் முதலாகப் பலர். அவருள் கலச யோனியாகிய ஆசிரியன் அகத்தியன் முனைவனாகிய திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளிடத்துத் தமிழின் இயற்கை முதல் நூல் உணர்ந்து, பின்னர் அதன் பொருளைக் குன்றெறிந்த முருக வேளிடத்துக் கேட்டுத் தெளிந்து முத்தமிழ் இலக்கணமும் முப்பொருளும் ஆதியில் முற்றக் கூறினான் ஆகலின் அவன் அருளிச் செய்த சிற்றகத்தியம், பேரகத்தியம் என்னும் இருநூலும் தமிழிற்குச் செயற்கை முதல்நூலாயின. நாரதன் முதலியோரும் அம்முனைவனை வழிபட்டுத் தலைவராயினார் ஆகலின் அவர் பிறிதொரு செயற்கை நூலின் வழித்தாக நூல் செய்யார் ஆகலானும், நாரதன் இசைத் தமிழொன்றே முற்றக் கூறினான் எனவும் ஏனையோர் ஒரு தமிழாயினும் முற்றக் கூறினான் எனவும் ஏனையோர் ஒரு தமிழாயினும் முற்றக் கூறாது சிற்சில பகுதியே கூறினார் எனவும் பிற நூல்களான் அறியப்படலானும், அவ்வாசிரியர் செய்த நூலெல்லாம் அகத்தியத்துக்கு இணையாகிய செயற்கை முதல்நூல் எனப்படும். இவ்வாற்றான் செயற்கை முதல்நூல் எல்லாம் முனைவன் கண்ட இயற்கை முதல்நூலின் வழியவே ஆதலின் அவற்றுள் முடிந்த நூலுக்கு ஏனைய இணை நூலாயின. இனி, |