பக்கம் எண் :

118பாயிர விருத்தி

மாயுவின் மகனும் யயாதியின் தந்தையுமாகிய நகுடன் துரங்க வேள்வி நூறு முடித்து இந்திரபதம் பெற்றுச் செல்லுழி, சிவிகை தாங்கிச் சென்ற முனிவரரைச் செருக்கான் மதியானாகி, விரைந்து செல்லுக என்று ஏவுவான் ‘சர்ப்ப சர்ப்ப’ எனக் கூற, அவனை அம் முனிவரருள் அகத்தியனே இந்திர பதத்தினின்றும் இழிந்து பூமியில் சர்ப்பம் ஆகுமாறு சபித்தான். பின்னொரு காலத்தில் வேதத்தில் கூறும் ‘அசம்’ என்பது ‘ஆடு’ என்ற பிறரெல்லாம் கூற, உயிர்க்கொலை புரிந்து வேட்டல் கூடாதென மறுத்து, வேதம் கூறிய சொற்கு ‘மூவாட்டை நெல்லேயாம்’ எனப் பொருள் உரைத்து அவ்வாறே பன்னீரியாண்டு பொதியிலின்கண் இருந்து வேள்வி செய்து, இந்திரன் முதலாய தேவர் அவி ஏலாராகி மழைவளம் தடுப்ப, தன் தவவலியால் பல்வளனும் படைத்து, நான்முகப் புத்தேள் முதலாய மூவர்க்கும் வித்தினைக் கொண்டு அவி அளித்து, ஏலாதாரை வெகுண்டு சபித்தற்கு எண்ண, அஃது அறிந்து அவர் அஞ்சி எதிர்வந்து வரம் கிடப்ப, ‘உயிர்க் கொலை வேள்வி புலைவினையாகா அறவினையே ஆயினும் கடையாய வேள்வி’ என்றும் ‘அல்லாத வேள்வியே உத்தமவேள்வி’ என்றும் கூறித் தேவர்க்கு வரம் அளித்த அருந்தவக் கொள்கையுடையானும் அகத்தியனே. இவ்வாறு வேதவியாசன் இதிகாசமும் ஐந்தாம் வேதமுமாகிய பாரதத்துள் கூறினான்.

இன்னும் வியாசன் காந்தம் முதலாய புராணத்துள், முனிவர்களை வஞ்சனையால் கோறலே தொழிலாகக் கொணட வாதாபி இல்வலன் என்றும் அசுரர் இருவரைத் தனது தவ மகிமையால் அழித்தனன் என்றும், தேவர்கள் பொருட்டுக் கடல் நீரை ஆசமனஞ் செய்து வற்றச் செய்தனன் என்றும், ஒரு காலத்துத் தேவரும் முனிவரும் மேருவில் கூடியபோழ்து மேரு தாழ்ந்து தெற்கு உயரவே அதனைச் சமன் செயற்பொருட்டுத் தேவர்கள் வேண்ட அகத்தியனே தென் திசைப்போந்து சமம் செய்தான் என்றும் பிறவும் கூறினான். தென் திசையைச் சமம் செய்தான் என்னும் சரித்திரத்தால் எல்லாத் தேவரும் எல்லா முனிவரும் ஒருங்கு கூடியவழி அகத்தியற்கு இணையாத லன்றி எத்தேவராயினும் எம்முனிவராயினும் அவற்கு இணையாகார் என்பது போதரும். தென்திசைப் போந்த பின்னரே அப்பெரியோன் தமிழ் முதல்நூல் இயற்றியதும் தென்மதுரையில் தலைச்சங்கம் நிறுவியதும் பொதியிலைத் தனக்கு ஆச்சிரமமாகக் கொண்டமையும் ஆயின.